இந்தியா

கொரோனாவுக்கு எதிரான போராட்டம்.. இந்தியாவின் செயல் அற்புதமானது.. பாராட்டிய ஐநாவின் தலைவர்

Published

on

கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில் இந்தியாவின் தலைமை பண்பையும், கொரோனா தடுப்பூசிகளின் விநியோகத்தை உலக சந்தைக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் முயற்சிகளையும் ஐ.நாவின் தலைவர் அன்டோனியோ குடரெஸ் பாராட்டியுள்ளார்.

உலகளாவிய கொரோனா வைரஸ்க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. உலகிலேயே மிகப்பெரிய மருந்து உற்பத்தி மையமான சீரம் இன்ஸ்டிடியூட் நிறுவனம் இந்தியாவில் தான் உள்ளது. இந்த நிறுவனத்தில் தான் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம் இணைந்து உருவாக்கி கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்த தடுப்பூசிகளை இந்தியா உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. கனடா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளும் கூட இந்தியாவின் உதவியை நாடியுள்ளது. கடந்த வாரம் ஐ.நாவின் அமைதி காக்கும் படையினருக்கு 200,000 டோஸ்கள் கொரோனா தடுப்பூசிகளை பரிசாக அறிவித்தது. இந்த நிலையில் தான் இந்தியாவின் தலைமை பண்பையும், கொரோனா தடுப்பூசிகளின் ஏற்றுமதி செய்வது குறித்தும் ஐக்கிய நாடுகள் சபை பாராட்டியுள்ளது.

ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்திக்கு அன்டோனியோ குடரெஸ் எழுதியுள்ள கடிதத்தில், ஐநாவின் அமைதி காப்பாளர்களுக்கு 200,000 டோஸ் வழங்குவதற்காக இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு தனது தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

உண்மையில், 150 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு முக்கியமான மருந்துகள், சோதனை கருவிகள், வென்டிலேட்டர்கள் மற்றும் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி தொற்றுநோய்களுக்கான எதிர் நடவடிக்கையில் இந்தியா உலகளாவிய தலைவராக இருந்து வருகிறது. உலக சுகாதார அமைப்பால் தற்போது ஒப்புதல் வழங்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றை உற்பத்தி செய்வதில் இந்தியா மேற்கொண்ட முயற்சிகள் உலகளாவிய தடுப்பூசி சந்தையில் மிகவும் தேவையான விநியோகத்தை கொண்டு வருகின்றன என்றும் தெரிவித்தார்.

உலகம் முழுவதிலும் ஐநாவின் 12 அமைதி காக்கும் நடவடிக்கைகளில் மொத்தம் 94,484 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள். மொத்தம் 121 நாடுகள் ஐநாவின் அமைதி காக்கும் பணிகளில் பங்காற்றி வருகின்றன. இதில் இந்தியா தான் அதிகளவில் பணியாளர்களை அனுப்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்தியா அறிவித்த இந்த நன்கொடைக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டுள்ளோம். இந்த விநியோகம் ஐ.நா.வின் ஆதரவுத் துறையால் செயல்படுத்தப்படும் என்று ஐநா பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version