கிரிக்கெட்

நடுவரின் தவறு உலகக் கோப்பை முடிவையே மாற்றியுள்ளது: சர்ச்சையை கிளப்பும் ஒரு ரன்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ள நிலையில் தற்போது நடுவர் செய்த ஒரு சிறு தவறு உலகக் கோப்பை முடிவையே மாற்றியுள்ளதாக புதிய சர்ச்சை ஒன்று கிளம்பியுள்ளது.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று உலகக் கோப்பையை முதன் முறையாக கைப்பற்றியது. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி தோற்கவும் இல்லை, இங்கிலாந்து அணி வெற்றி பெறவும் இல்லை. ஆனால் கோப்பையை மட்டும் கைப்பற்றியுள்ளது இங்கிலாந்து அணி. இதற்கு காரணமான ஐசிசியின் சர்ச்சைக்குறிய விதியை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

முதலில் நடந்த ஐம்பது ஓவர் போட்டி சமனில் முடிய, வெற்றி தோல்வியை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. ஆனால் சூப்பர் ஓவரும் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க எந்த அணி அதிக பவுண்டரிகளை அடித்ததோ அந்த அணிக்கு வெற்றி அறிவிக்கப்படும் என்ற சூப்பர் ஓவர் விதி நியூசிலாந்து அணியின் வெற்றியை பறித்து, கோப்பையை இங்கிலாந்துக்கு கொடுத்துவிட்டது. இந்நிலையில் இந்த போட்டியில் நடுவர் செய்த ஒரு சிறு தவறை முன்னாள் நடுவர் சைமன் டஃபெல் கண்டுபிடித்து சுட்டிக்காட்டியுள்ளார்.

இங்கிலாந்து அணியின் கடைசி ஓவர் நான்காவது பந்தில் ஓவர் த்ரோ முறையில் இங்கிலாந்து அணிக்கு ஆறு ரன்கள் வழங்கப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அடித்த அந்த பந்தைப் பிடித்த மார்ட்டின் கப்தில் கீப்பரை நோக்கி வீச முயன்றார். ஆனால் கப்தில் எறிந்த அந்தப்பந்து ஸ்டோக்ஸின் பேட்டில் பட்டு பவுண்டரிக்குச் சென்றது. அப்போது பென் ஸ்டோக்ஸும் ஆதில் ரஷித்தும் கிராஸ் ஆகவில்லை. ஆனால் நடுவராக இருந்த குமார் தர்மசேனா அதற்கு ஆறு ரன்கள் வழங்கினார். ஓடிய இரண்டு ரன்களுடன் ஓவர் த்ரோவில் கிடைத்த பவுண்டரியுடன் சேர்த்து ஆறு ரன்கள் கணக்கில் சேர்க்கப்பட்டது.

ஓவர் த்ரோ அல்லது பீல்டரின் த்ரோ நடவடிக்கை மீதான விதி 19.8-இன் படி அந்தப் பந்துக்கு ஐந்து ரன்கள் மட்டுமே வழங்கியிருக்க வேண்டும். பேட்ஸ்மேன்கள் இருவரும் கிராஸ் ஆகாததால் ஒரு ரன் மட்டுமே கணக்கில் சேரும். இந்த விவகாரத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது. காரணம் நியூசிலாந்து அணியின் வெற்றியானது அந்த ஒரு ரன்னில்தான் பறிபோனது.

அந்தப் பந்தில் ஐந்து ரன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தால் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் செய்திருக்க மாட்டார். மறுமுனையில் இருந்த ஆதில் ரஷித்தான் பேட்டிங் செய்திருப்பார். அப்போது நியூசிலாந்து அணி வெற்றிபெறுவது எளிதாகியிருக்கும். நடுவரின் இந்த சிறு தவறானது உலகக் கோப்பை யாருக்கு என்ற முடிவையே மாற்றியமைத்துள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version