தமிழ்நாடு
பெரியார், அண்ணா, கலைஞருடன், ஸ்டாலின் கை குலுக்கும் படம்; உதயநிதியின் ஸ்பெஷல் கிஃப்ட்!
2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக, இன்று ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ளது. மு.க.ஸ்டாலின், இன்று முதல் முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றுள்ளார். அவருக்கு திமுக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அளித்துள்ள பரிசு பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
2021 சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கு உரிமை கோரியது திராவிட முன்னேற்றக் கழகம். அக்கட்சியின் சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலினை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு மனதாக முதல்வர் பொறுப்புக்கு தேர்வு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று ஸ்டாலின் மற்றும் தமிழக அமைச்சரவையின் பதவியேற்பு நிகழ்ச்சி, சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் எளிமையாக நடந்து முடிந்தது.
முதல்வராக பதவியேற்றதைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலின், கலைஞர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்துக்கும் சி.ஐ.டி காலனி இல்லத்துக்கும் சென்று அவரது உருவப் படத்தை வணங்கினார்.
இப்படியான சூழலில் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா மற்றும் தந்தை பெரியார் ஆகியோர் மு.க.ஸ்டாலினை கை கொடுத்து வாழ்த்தும் வகையிலான ஓவியப் படம் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். இது திமுகவினரை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.