சினிமா செய்திகள்

90-களின் இறுதியில்’ என திருத்துவதா? ‘கர்ணன்’ படக்குழுவினர்களுக்கு உதயநிதி அதிருப்தி!

Published

on

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு அவர்களின் தயாரிப்பில் உருவான திரைப்படம் ‘கர்ணன்’. இந்த திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்த படத்தில் ஒரு பிழை இருப்பதாக உதயநிதி சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்த படத்தில் நடந்த சம்பவங்கள் 1995ல் அதிமுக ஆட்சியில் நடந்தது என்றும் ஆனால் 1997ல் திமுக ஆட்சியில் நடந்தது போல் காண்பிக்கப்பட்டுள்ளது என்றும், அதை திருத்திக் கொள்ள இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரிடம் தெரிவித்ததாகவும் கூறினார். அதன்படி நேற்று முதல் ‘கர்ணன்’ படத்தில் ஆண்டு திருத்தப்பட்டது. ஆனால் 1997 என்று குறிப்பிடாமல் 90களின் இறுதியில் என திருத்தப்பட்டது. இந்த திருத்தத்திற்கு உதயநிதி தனது அதிருப்தியை தெரிவித்து உள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:

கர்ணன் தவிர்க்க முடியாத திரைப்படம் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. 1995-ல் நடந்த கொடியன்குளம் கலவரம் 1997-ல் நடந்ததாக காட்டப்பட்டிருந்ததை தயாரிப்பாளர் – இயக்குனரிடம் சுட்டிக்காட்டினேன். அவர்களும் அதனை திருத்திக்கொள்வதாக உறுதியளித்து அதை இன்று செய்துள்ளனர்.

படைப்பிலுள்ள பிழையை சுட்டிக்காட்டுகையில் அதை திருத்திக்கொள்வது வரவேற்புக்குரியது. கொடியன்குளம் கலவரம் 1995-ல் அதிமுக ஆட்சியில் நடந்ததை அனைவரும் அறிவர். அதற்கு ஏராளமான சான்றுகளும் உள்ளன. எனினும் ’90-களின் இறுதியில்’ என திருத்தப்பட்டு வருவதை முன்வைத்தும் அதிருப்தி குரல்கள் எழுகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களின் மேன்மைக்கான கலைஞரின் பங்களிப்புகள் காலத்தால் அழியாதவை.அதை யாராலும் மறுக்கவோ-மறைக்கவோ முடியாது. எனவே, இந்த விஷயத்தை இத்துடன் விடுத்து ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்துவோம். கர்ணன் படக்குழுவுக்கு மீண்டும் என் அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

Trending

Exit mobile version