விமர்சனம்

உடன்பிறப்பே – விமர்சனம்

Published

on

ஊரில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் கரடு முரடான அண்ணன் வைரவன். எல்லாத் தவறுகளையும் சட்டத்தின்படி தான் தீர்க்க வேண்டும் என நினைக்கும் கணவர். கருத்துகளில் இருவரும் இவ்வளவு வேறுபாடு இருப்பதால் இருவரும் பிரிந்து நிற்கிறார்கள் (வழக்கமாகத் தமிழ் சினிமாவில் நடப்பதுதான்). இவர்களை இணைக்கத் தங்கை மாதங்கி நடத்தும் பாசப்போராட்டம்தான் இந்த உடன்பிறப்பே…

பாசமலர்… கிழக்குச் சீமையிலே ரேஞ்சுக்கு ஒரு படம் எடுக்க நினைத்து அதை ஸ்கூப் செய்த மாதிரி ஆக்கியிருக்கிறார் இரா.சரவணன். கடைக்குட்டி சிங்கம் தந்த தைரியம். ஆனால், கொஞ்சம் கூட எடுபடவில்லை. கதை, கதைக்களம், சண்டை, சோகம், பாசம், அடிதடி, அட்வைஸ் என எல்லாமே ஓவர் டோஸ் ஆகி எப்படா முடியும் என்றாகிவிட்டது.

ஜோதிகாவின் 50-வது படம். அண்ணன், தங்கை பாசம், கொஞ்சம் கிராமத்து வாசனை என எடுத்துவிட்டால் போதும் என்று நினைத்திருப்பார்கள் போல. என்ன சொன்னாலும் யாரைப் பார்த்தாலும் அடிக்கிறார் சசிக்குமார்… அதேபோல ரோட்டில் நின்னா கூட அட்வைஸ் செய்கிறார் சமுத்திரக்கனி. சூரி காமெடி என்ற பெயரில் செய்யும் கொடுமைகளையும் தாங்க வேண்டியிருக்கிறது. பேசாமல் குணச்சித்திர நடிகராகவாவது அவர் நடிக்கத் தொடங்கலாம். சாவதற்காகவே தமிழ் சினிமாவில் அளவெடுத்துச் செய்து வைத்திருக்கிறார்கள் அன்பரசனை. வருகிறார்… வில்லத்தனம் அல்லது நட்பாக இருக்கிறார் இடையில் செத்துப் போகிறார். சார்ப்பட்டாவில் மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டார்.

udanpirappe

நூறுநாள் வேலைத் திட்டத்தை கலாய்ப்பது… சாதியைக் காரணமாகக் காட்டி திருவிழாவில் பேசுவது… எனப் பல அரசியல் ரீதியிலான போதாமைக் காட்சிகளும் இருக்கின்றன.

சசிக்குமாரும் தங்கை ஜோதிகாவும் ஏன் இவ்வளவு பாசமாக இருக்கிறார்கள் என்பது எந்த இடத்திலும் சொல்லப்படவில்லை. இவர்களின் மிகை நடிப்பால் இந்தப் படத்திலிருந்து மட்டுமல்ல இந்த அண்ணன் தங்கை பாசப் போராட்டத்திலிருந்து விலகித்தான் நிற்க முடிகிறதே தவிர ஒட்ட முடியவில்லை. ஜோதிகாவின் 50-வது படம் என்பதற்காக அவருக்கான பில்டப் காட்சிகள், பின்னணி இசை… அவருக்கு வசனம்… அவர் நடிக்கக் காட்சிகள் என மொத்தமாகப் புரட்டி எடுக்கிறார்கள். சினிமா என்ற பெயரில் எடுக்கப்பட்ட மீண்டும் ஒரு தொலைக்காட்சி நாடகம்… தாங்க முடியவில்லை. உங்களால் முடியுமானால் தாங்க முடிகிறதா என சோதித்துப் பாருங்கள்… வாழ்த்துகள்…

விநோதய சித்தம் – பட விமர்சனம் படிக்க மேலும் கீழே ஸ்வைப் செய்யவும்!

 

Trending

Exit mobile version