உலகம்

ஆப்பிள் ஸ்டோரில் பட்டப்பகலில் திருடிய மர்ம மனிதர்கள்.. வேடிக்கை பார்த்த பொதுமக்கள்!

Published

on

ஆப்பிள் ஸ்டோரில் இருந்து மர்ம நபர்கள் பட்டப்பகலில் திருடிக் கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பொதுவாக திருட்டு என்பது இரவில் கடை மூடிய பின் நடக்கும் என்பதும் அல்லது கடை திறந்திருக்கும் போது துப்பாக்கி முனையில் நடக்கும் என்பதும் தெரிந்ததே. ஆனால் கலிபோர்னியாவில் உள்ள ஒரு ஆப்பிள் ஸ்டோரில் பிளாக் ஃப்ரைடே சேல்ஸ் நடந்து கொண்டிருந்தபோது திடீரென 2 மர்ம நபர்கள் முகமூடி அணிந்து கடைக்குள் நுழைந்தனர்.

அவர்கள் அந்த கடையில் இருந்த விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் தாங்கள் கொண்டு வந்த பையில் எடுத்து வைத்தனர். ஒருசில வாடிக்கையாளர்கள் கையில் வைத்திருந்த பொருட்களையும் திருடினர். மேலும் சில பொருட்களை கீழே போட்டு உடைத்தனர்.

அப்போது அந்த கடையில் இருந்த ஊழியர்கள் அல்லது பொருட்களை வாங்கிக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எதுவும் சொல்லாமல் பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். யாராவது ஒருவராவது அந்த திருடர்களை எதிர்த்து கேள்வி கேட்பார் என்று பார்த்தால் ஒருவர் கூட கடைசி வரை பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்த தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த போதுதான் அந்த திருடர்கள் பொருள்களோடு ஓட தொடங்கினர் என்பதும் கடைசியில் அவர்கள் ஒரு சந்து வழியாகச் சென்று மாயமாய் மறைந்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்த வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் கடும் கோபத்தில் கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர். திருடர்கள் கையில் ஆயுதம் இருந்ததாக சிசிடிவி காட்சியில் தெரியவில்லை. இரண்டு மர்ம நபர்கள் திருடி கொண்டிருக்கும்போது பார்வையாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பது எந்த விதமான மனநிலை என்பது தெரியவில்லை என்று கூறி வருகின்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version