தமிழ்நாடு

கொடநாடு கொலை வழக்கு: சயன், மனோஜ் டெல்லியில் அதிரடி கைது!

Published

on

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் அடுத்தடுத்து நடந்த கொலை சம்பவங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான் காரணம் என தெகல்கா முன்னாள் ஆசிரியர் சாமுவேல் மாத்யூஸ் குற்றம் சாட்டினார். இதில் எடப்பாடி பழனிச்சாமி தான் இந்த கொலைகளுக்கு காரணம் என பேட்டியளித்த சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் டெல்லியில் நேற்று மாலை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலைக்கான பின்னணி குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டு பேசிய தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், கொடநாட்டில் நடந்த கொலைகளின் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு முக்கிய பங்கு இருக்கிறது என்ற பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அந்த பேட்டியில் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய சயன் மற்றும் மனோஜ் ஆகியோரை அறிமுகப்படுத்தி அவர்களும் வாக்குமூலம் அளித்தனர். இது அதிமுக வட்டாரத்தை கதிகலங்க வைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார். அதில், கொடநாடு எஸ்டேட் சம்பவத்தில் என்னை சம்பந்தப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ளனர். இது முற்றிலும் உண்மைக்கு மாறானது. இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், இவர்களுக்கு பின்புலமாக உள்ளவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சென்னை காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் துறை சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளும் என்றார்.

அதன்படி முதல்வர் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து மேத்யூஸ், சயன், மனோஜ் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்த சென்னை போலீஸார் சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையிலான தனிப்படையை டெல்லி அனுப்பினர். அவர்கள் டெல்லி போலீசார் உதவியுடன் நேற்று மாலை சயன், மனோஜ் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் விசாரணைக்காக சென்னை கொண்டுவரப்படுகிறார்கள்.

seithichurul

Trending

Exit mobile version