தமிழ்நாடு

ஊரெல்லாம் தினகரன் பேச்சுதான்: அமமுகவின் பிரச்சார பீரங்கியாக மாறிய தேர்தல் ஆணையம்!

Published

on

இன்று பிற்பகல் 3 மணியுடன் மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைகிறது. ஆனால் இந்த நிமிடம் வரை டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்ட அமமுக கட்சிக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க முடியாது என மல்லுக்கட்டி வருகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்தில் இந்த அனுகுமுறை பல்வேறு சந்தேகத்தை மக்கள் மத்தியிலும், அரசியல் கட்சியினரிடமும் ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள தமாகவுக்கு கேட்ட சின்னத்தை ஒதுக்கிய தேர்தல் ஆணையம் எதிர் கட்சிகளிடம் பாரபட்சமாக நடந்துகொள்கிறது. அதிமுகவின் ஒரு அணியினர் தான் தினகரன் தரப்பினர் என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது.

அவர்கள் அதிமுக தங்களுக்கு தான் சொந்தம் என கூறி வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நிலுவையில் உள்ளதால் தினகரன் தரப்பினால் தங்களின் அமமுகவை பதிவு செய்ய முடியாத சூழல் உள்ளது. ஆனால் கட்சியை பதிவு செய்யாத காரணத்தை காட்டி தேர்தல் ஆணையம் அவர்களுக்கு குக்கர் சின்னத்தை கொடுக்க மறுக்கிறது. இது உச்ச நீதிமன்றத்தையே எரிச்சலாக்கியுள்ளது.

அதிமுகவின் ஒரு அணியாக உள்ள தினகரன் தரப்பினர் தற்போது தேர்தலில் போட்டியிட்டு தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற தேர்தல் ஆணையம் வழிவகை செய்ய வேண்டும். ஆனால் அதற்கு முட்டுக்கட்டை போடுவதையே திறம்பட செய்துவருகிறது தேர்தல் ஆணையம். குக்கர் சின்னத்தை பெற தினகரன் செய்து வரும் சட்டப்போராட்டம் பொதுமக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது தினகரன் தரப்புக்கு மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையத்தின் பின்னணியில் இருந்துகொண்டு குறிப்பிட்ட சில கட்சிகள் தினகரனுக்கு நெருக்கடி கொடுக்கிறது என சாமானிய மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் இந்த செயல்பாடுகள் மூலம் டிடிவி தினகரனின் அமமுக மறைமுகமாக ஆதாயம் அடைந்து வருகிறது. இதன் மூலம் அமமுக அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைகிறது.

அமமுகவுக்கு இலவச விளம்பரத்தை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தி கொடுத்துவிட்டது. இந்த சூழலில் தினகரன் தரப்புக்கு குக்கர் சின்னத்தை கொடுத்தாலும், கொடுக்காவிட்டாலும் அவை இரண்டுமே தினகரன் தரப்புக்கு சாதகமாகத்தான் அமையும். தேர்தல் ஆணையத்தையும், பின்னணியில் உள்ள அரசியல் கட்சியையும் எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்தி குக்கர் சின்னத்தை வென்றெடுத்தார் தினகரன் என்ற நல்ல இமேஜ் இதன் மூலம் உருவாகும். அல்லது தேர்தல் ஆணையத்தாலும், பின்னணியில் உள்ள அரசியல் கட்சிகளாலும் பழிவாங்கப்பட்டுள்ளார் டிடிவி தினகரன் என்ற அனுதாப அலையும் இதன் மூலம் உருவாகும். தேர்தலுக்கு முன்னரே தினகரனின் வெற்றி இதன் மூலம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version