தமிழ்நாடு

டிடிவி தினகரன் ராஜினாமா செய்யப்போகிறாரா?: அரசியலில் பரபரப்பு!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்துக்கு இது சோதனை காலம் எனலாம். நல்ல வரவேற்பை பெற்று வந்த அமமுக தற்போது சற்று தடுமாற ஆரம்பித்துள்ளது. அக்கட்சியில் பலர் அதிருப்தியில் உள்ளது தற்போது வெளிப்படையாக தெரிய ஆரம்பித்துள்ளது. இதனால் நெருக்கடியில் உள்ள டிடிவி தினகரன் தனது துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

முன்னதாக அமமுக மாநில அமைப்பு செயலாளராக இருந்த செந்தில் பாலாஜி திமுகவிற்கு சென்றார். இந்த பரபரப்பு ஓய்வதற்குள் அடுத்தடுத்து பல முக்கிய தலைவர்கள் வேறு கட்சிகளுக்கு தாவ உள்ளதாக செய்திகள் வெளியாகின. அதிலும் அமமுக மாநில கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் கட்சி மாற உள்ளதாகவும், அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் கசிந்தன.

இந்நிலையில் அமமுகவில் உள்ளவர்களின் இந்த அதிருப்திக்கு காரணம் அந்த கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தான் என கூறப்படுகிறது. அவரது குடும்பத்தில் உள்ளவர்களே அவரைப்பற்றி சிறையில் உள்ள பொதுச்செயலாளர் சசிகலாவிடம் குறைகூறி வருகின்றனர். சமீபத்தில் சசிகலாவை சந்தித்த இளவரசி மகன் விவேக், மகள் கிருஷ்ணப்பிரியா, இன்னொரு மகள் ஷகிலா, அவரது கணவர் ராஜராஜன், நடராஜன் தம்பி பழனிவேல் ஆகியோர் தினகரனுக்கு எதிராக வலுவாக பல குற்றச்சாட்டுகளை சசிகலாவிடம் வைத்ததாக தகவல் வருகிறது.

இவர்கள் சந்திப்பின் போது தினகரன் மற்றும் அவரது மனைவி அனுராதா தான் இந்த அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம். தினகரனை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இவர்களது சந்திப்புக்கு பின்னர் தினகரனை சந்தித்த சசிகலா அவரது செயல்பாடுகள் குறித்து கடுமையாக திட்டியுள்ளார். இதனால் இறுகிய முகத்துடனே தினகரன் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

தன்னை துணைப்பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என குடும்பத்தில் உள்ளவர்கள் சசிகலாவிடம் கோரிக்கை வைத்துள்ளதை அறிந்த டிடிவி தினகரன் தற்போது ராஜினாமா செய்யும் முடிவில் உள்ளதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

seithichurul

Trending

Exit mobile version