தமிழ்நாடு

நக்கீரன் கோபாலை கைது செய்ததில் தவறில்லை: டிடிவி தினகரன் மாற்றுக்கருத்து!

Published

on

மூத்த பத்திரிக்கை ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று தனிப்படை போலீசாரால் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். ஆளுநர் மாளிகையில் இருந்து வந்த புகாரை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கையில் தவறில்லை என அமமுக கட்சியின் தலைவர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவிக்கும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கும் பழக்கம் இருந்ததாக நக்கீரன் பத்திரிக்கை கட்டுரை வெளியிட்டது. இந்த வழக்கில் ஆளுநர் வரை தொடர்பு உள்ளது, ஆனால் இதனை மறைக்க அரசு முயல்கிறது என அந்த கட்டுரையில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து புகார் சென்றதையடுத்து நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் கைது செய்து இந்திய தண்டனைச் சட்டம் 124-இன் கீழ் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரைப் பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நக்கீரன் கோபால் கைதை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதில் மாற்றுக்கருத்தாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதை வரவேற்றுள்ளார்.

திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், நக்கீரன் கோபாலை கைது செய்ததில் தவறில்லை. ஆதாரம் எதுவுமில்லாமல் தனிநபர் பற்றி அவதூறாக செய்தி வெளியிடுவது தவறு. கடந்த 2009-ஆம் ஆண்டு என்னைப் பற்றியும், அவதூறாக செய்தி வெளியிட்டார். அதற்கு, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, அவருக்கு தண்டனை பெற்றுத்தந்தேன் என்றார் அவர்.

Trending

Exit mobile version