தமிழ்நாடு

இரண்டரை கோடி வாங்கினேனா? டிடிவி தினகரன் விளக்கம்!

Published

on

அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விவி மினரல்ஸ் நிறுவனத்தின் வைகுண்டராஜனிடம் இருந்து இரண்டரை கோடி ரூபாய் ஆர்கே நகர் தேர்தலின் போது வாங்கியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து இதனை மறுத்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தின் முக்கியமான தொழில் அதிபர்களில் ஒருவரான வைகுண்டராஜன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனுடன் நெருக்கமானவர் என அறியப்படுகிறது. இந்த நெருக்கத்தின் காரணமாகத்தான் திசையன்விளை, சென்னையில் எழும்பூர், திருவான்மியூர் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள விவி மினரல்ஸுக்குச் சொந்தமான அலுவலகங்கள், வைகுண்டராஜன், அவரது மகன்களின் வீடுகள், அலுவலகங்களில் கடந்த ஆறு நாட்களாக வருமான வரித் துறையினர் அதிரடி சோதனை நடத்திவந்ததாக ஒரு தகவல் பரவுகிறது.

இந்நிலையில் இந்த சோதனையின் போது விவி மினரல்ஸ் நிறுவனம் 800 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும், சோதனையின்போது கணக்கில் வராத எட்டு கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் வருமான வரித் துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஆர்கே நகர் இடைத் தேர்தலின்போது விவி மினரல்ஸ் நிறுவனம், தினகரனுக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததற்கான ஆவணங்கள் வருமான வரி சோதனையின்போது சிக்கியிருப்பதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.

இதனையடுத்து இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ரத்து செய்யப்பட்ட ஆர்கே நகர் இடைத்தேர்தலின்போது, விவி மினரல்ஸ் நிறுவனம் எனக்கு இரண்டரை கோடி ரூபாய் கொடுத்ததாக ஒரு தவறான தகவல் பரப்பப்படுகிறது. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான தகவல் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய பொய்யான தகவலைப் பரப்புபவர்கள் நிறுத்திக்கொள்ளாவிட்டால், சட்டப்படி உரிய நடவடிக்கை எடுப்பேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version