தமிழ்நாடு

முதல்வர் பதவிக்கு முயன்ற தம்பிதுரை: போட்டுடைத்த தினகரன்!

Published

on

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை தன்னை முதல்வர் ஆக்குவார்கள் என எதிர்பார்த்ததாக அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

அதிமுக, பாஜக இடையே மக்களவை தேர்தலுக்கு கூட்டணி வைக்க மறைமுகமாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. ஆனால் அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை அதிமுக, பாஜக கூட்டணிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார். இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன் தம்பிதுரை குறித்து சில தகவல்களை கூறியுள்ளார்.

தம்பிதுரை பல நாட்களாக முதல்வர்கள் கனவில் இருந்துவந்தவர். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தன்னை முதல்வராக்குவார் என்று தம்பிதுரை எதிர்பார்த்திருந்தார். ஆனால், ஓபிஎஸ்-ஐ முதல்வராக்கிவிட்டதால் தன்னை முதல்வராக்க மாட்டார்கள் என்று தெரிந்துகொண்டு, சசிகலா முதல்வராக வேண்டும் என்று கோரிக்கை வைத்தார் தம்பிதுரை.

பின்னர் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதும் அவரது கோபம் இன்னும் அதிகமானது. பின்பு பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரோடு இணைந்துகொண்டார் தம்பிதுரை. இவர்கள் டெல்லிக்கு அடிமையாக இருப்பது உண்மை. தற்போது பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தங்களால் வெற்றிபெற முடியாது என்று தெரிந்து கொண்டு பாஜகவை விமர்சிக்கும் தம்பிதுரை, டெல்லியில் பிரதமர், மத்திய அமைச்சர்களுடன் எல்லாம் நட்புடன் இருந்துவருகிறார்.

தம்பிதுரை இந்த ஆட்சி போக வேண்டும் என்ற எண்ணத்தில் இவ்வாறு பேசிவருகிறார். எடப்பாடி பழனிசாமி வேறு வழியில்லாமல் மவுனமாக இருந்துகொண்டு இருக்கிறார். இது ஓர் ஏஜென்டுகளின் அரசாங்கம் என கடுமையாக விமர்சித்தார் டிடிவி தின்னகரன்.

Trending

Exit mobile version