தமிழ்நாடு

எடப்பாடியின் டாடியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது: தினகரன் ஆவேசம்!

Published

on

டிடிவி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக கொண்டுள்ள அமமுக வேட்பாளர்களுக்கு பரிசுப்பெட்டி சின்னமாக கிடைத்ததையடுத்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார் தினகரன். சின்னத்தை பிரபலப்படுத்துவதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர் அமமுகவினர்.

இந்நிலையில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வத்தை ஆதரித்து நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் தினகரன். அப்போது பேசிய அவர், எடப்பாடி பழனிச்சாமிக்கு மக்களை சந்திக்க பயமாக இருப்பதால் அவர் சேலத்துக்கு வரும்போதெல்லாம் 500 முதல் 1000 போலிசார்கள் பாதுகாப்புக்கு வருகிறார்கள்.

விவசாயிகளை பற்றி கவலைப்படாமல் விளை நிலங்களை அழித்து 8 வழிச்சாலை திட்டத்தை அமல்படுத்த துடிக்கிறார். ஜெயலலிதாவுக்கு மணிமண்டபம் கட்டக்கூடாது, அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றம் சென்ற கட்சிகளுடன் எல்லாம் தற்போது கூட்டணி வைத்துள்ளார்கள். துரோகிகளுக்கு தக்க பாடத்தை இந்த தேர்தலில் புகட்ட வேண்டும்.

கடந்த மக்களவை தேர்தலில் மோடியா? லேடியா என கேட்டார் ஜெயலலிதா. ஆனால் இப்போது மோடியை சில அமைச்சர்கள் டாடி என்கிறார்கள். மக்களவை தேர்தலிலும், 18 தொகுதி இடைத்தேர்தலிலும் நாம் வெற்றி பெறுவது உறுதி. நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சைகள் வெற்றி பெற்று ஒரு பிரதமரை தேர்ந்தெடுக்க கூடிய சூழ்நிலை உருவாகும். இந்த தேர்தலோடு எடப்பாடி பழனிசாமி ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். பிரதமர் மோடி அல்ல, எடப்பாடி பழனிசாமியின் டாடியே வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது என்றார் ஆவேசமாக.

seithichurul

Trending

Exit mobile version