தமிழ்நாடு

அதிமுக, பாமக, பாஜக கூட்டணியை விமர்சிக்கும் தினகரன்: கல்லைக் கட்டிகொண்டு கிணற்றில் இறங்கியுள்ளனர்!

Published

on

தமிழக அரசியலில் நீண்ட நாட்களாக நீடித்து வந்த மக்களவை தேர்தல் தொடர்பான அதிமுகவின் கூட்டணி குழப்பம் நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது. வரும் மக்களவை தேர்தலை அதிமுக பாஜக மற்றும் பாமக கட்சிகளுடன் இணைந்து சந்திக்க உள்ளது. இந்த கூட்டணியுடன் தேமுதிகவும் இணைய வாய்ப்புள்ளது.

பல்வேறு இழுபறிக்கு மத்தியில் நேற்று பாஜக, பாமக கட்சிகளுடன் அதிமுகவின் கூட்டணி கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் பாஜக 5 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இந்த தேர்தல் கூட்டணி அரசியல் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அதிமுகவின் தற்போதையை தீவிர எதிரியான டிடிவி தினகரன் இந்த கூட்டணி குறித்து சேலத்தில் நேற்று செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அதில், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிமுக அரசு மீது ஆளுநரிடம் ஊழல் குற்றச்சாட்டை பாமக தெரிவித்து வந்தது. அன்புமணி, முதல்வர் எடப்பாடியை பற்றியும் இந்த ஆட்சியை பற்றியும் என்னவெல்லாம் பேசியிருந்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.

இது அம்மாவுடைய ஆட்சி. ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டார்கள். அவர் உயிரோடு இருந்தால் நிச்சயம் சிறையில் இருப்பார் என்று கூறியவர்களுடன் கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. இது பலவீனமான கூட்டணி. இந்த கூட்டணி 40 தொகுதிகளிலும் தோல்வி அடையும். ஏற்கனவே மக்கள் விரும்பாத ஆட்சி நடைபெறுகிறது. தற்போது அம்மாவுக்கு துரோகம் செய்துவிட்டனர். அனைவரும் இடுப்பில் கல்லைக் கட்டிகொண்டு கிணற்றில் இறங்கியுள்ளனர் என்றார்.

Trending

Exit mobile version