தமிழ்நாடு

முற்றிலும் தோல்வி: என்ன சொல்கிறார் டிடிவி தினகரன்!

Published

on

தமிழக சட்டசபை இடைத்தேர்தல் மற்றும் மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகிக்கொண்டு இருக்கின்றன. இதில் தமிழகத்தில் மக்களவை தொகுதிகளில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணியும், ஒரு தொகுதியில் அதிமுகவும் முன்னணியில் உள்ளது. சட்டசபை இடைத்தேர்தலை பொறுத்தவரையில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது.

தேர்தல் முடிவுகளுக்கு முன்னர் வெளியான கருத்துக்கணிப்புகளில் டிடிவி தினகரனின் அமமுக மக்களவை தேர்தலில் 2 முதல் 3 இடங்களை பெறும் எனவும், சட்டசபை இடைத்தேர்தலில் 5 இடங்களுக்குள் வெற்றிபெறும் எனவும் கணிக்கப்பட்டது. ஆனால் தற்போது அமமுக அனைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தேனி தொகுதியில் மூன்றாம் இடத்துக்கு சென்றுள்ளது. சில தொகுதிகளில் நாம் தமிழர், மக்கள் நீதி மய்யத்துக்கு கீழ் சென்றுள்ள நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தோல்வி குறித்தும் நடந்து முடிந்த தேர்தல் குறித்தும் தனது கருத்தை வெளியிட்டுள்ளார் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்.

தனது டுவிட்டர் பக்கத்தில், மக்கள் தீர்ப்புக்குத் தலைவணங்குகிறோம்! நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் தமிழக மக்கள் அளித்த தீர்ப்புக்குத் தலை வணங்குகிறோம். தேர்தல் அரசியலில் வெற்றி – தோல்வி என்பது இயல்பானது.

எத்தனையோ இன்னல்களுக்கும், இடையூறுகளுக்கும் இடையே கழகம் காக்க, மக்கள் பணியாற்ற சுயேச்சைகளாக களமிறங்கியவர்களுக்கும், இரவு- பகல் பார்க்காமல் உழைத்த கழக உடன்பிறப்புகளுக்கும், கழகத்திற்கு வாக்களித்து ஆதரவளித்த நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகளைக் காணிக்கையாக்குகிறேன்.

இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கற்றுத்தந்த துணிவோடு, ஃபீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் எழுந்து நிற்போம். தூய்மையான அன்போடு தமிழ்நாட்டு மக்களின் மனங்களை முழுமையாக வென்றெடுக்க தொடர்ந்து பாடுபடுவோம். தமிழகத்தின் உரிமைகளுக்காக அமமுகவின் குரல் எப்போதும் போல ஓங்கி ஒலித்திடும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version