தமிழ்நாடு

திருவாரூர் தொகுதி வேட்பாளர்: முதலில் அறிவித்து கெத்து காட்டிய தினகரன்!

Published

on

தமிழக அரசியல் களத்தில் தற்போது திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ஜொரம் சூடுபிடித்துள்ளது. பிரதான அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலுக்கு தயாராகி வரும் வேளையில் முதல் ஆளாக டிடிவி தினகரன் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளரை அறிவித்து கெத்து காட்டியுள்ளார்.

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவாரூர் தொகுதிக்கு ஜனவரி 28-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. காலியாக உள்ள 20 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தாமல் திருவாரூர் தொகுதிக்கு மட்டும் தற்போது இடைத்தேர்தல் நடத்தப்படுவதால் இந்த தேர்தல் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.

திருவாரூரில் அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. இந்நிலையில் அதிமுக, திமுக கட்சிகள் தங்கள் கட்சி வேட்பாளர்களை விரைவில் அறிவிப்பார்கள் என எதிர்பார்த்திருந்தநிலையில் அவர்களை முந்திக்கொண்டு முதல் ஆளாக தனது கட்சி வேட்பாளர் பெயரை டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

அமமுக சார்பில் அந்த கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.காமராஜ் அதிரடியாக திருவாரூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. எஸ்.காமராஜ் திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர் மாவட்டங்களில் நன்கு அறிமுகமானவர். அனைத்து அரசியல் கட்சியினரிடமும் சகஜமாக பழக கூடியவர்.

மன்னார்குடியைச் சேர்ந்த எஸ்.காமராஜ் பிரபலமான தரணி கல்வி குழுமத்தையும், தரணி கன்ஸ்டரெக்ஷனையும் நடத்திவருகிறார். இவர் சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவர். கடந்தமுறை மன்னார்குடி சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளரான டி.ஆர்.பி.ராஜாவிடம் 8200 வாக்குகள் குறைவாக பெற்று தோல்வியைத் தழுவினார்.

இந்நிலையில் மிகவும் பிரபலமான எஸ்.காமராஜை டிடிவி தினகரன் திருவாரூர் தொகுதி வேட்பாளராக முதல் ஆளாக அறிவித்து மாஸ் காட்டியுள்ளார். முந்திக்கொண்டு வேட்பாளர்களை அறிவித்து மற்ற கட்சிகளுக்கு நெருக்கடி கொடுப்பது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வழக்கம். அதனை டிடிவி தினகரன் பின்பற்றி வருகிறார். தினகரனின் இந்த வேட்பாளர் அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version