தமிழ்நாடு

சசிகலா பற்றி எடப்பாடியின் உதாசீனப் பேச்சுக்கு தினகரனின் மாஸ் ரிப்ளை!

Published

on

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா இன்று சிறையிலிருந்து விடுதலை ஆனார். இதனால் அவரது ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்றைய தினத்திலேயே ஜெயலலிதாவின் நினைவிடமும் மெரினா கடற்கரையில் திறக்கப்பட்டுள்ளது. இப்படி இரண்டு சம்பவங்களும் ஒரே நாளில் நடந்துள்ளது தமிழக அரசியல் தளத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இப்படியான சூழலில் சசிகலா விடுதலை குறித்து சில நாட்களுக்கு முன்னர் பேசியிருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘சசிகலா, மீண்டும் அதிமுகவில் இணைய 100 சதவீதம் வாய்ப்பு என்பதே கிடையாது. அவர் கட்சியிலேயே இல்லை. அதைப் போல தினகரனும் அதிமுகவில் இல்லை. அதிமுக என்பது பெரிய இயக்கம். இதில் பலர் வரலாம், போகலாம். ஆனால், கட்சி இருக்கும்.

தினகரனை, ஜெயலலிதா ஒதுக்கியே வைத்திருந்தார். அவர் உயிருடன் இருக்கும் வரை தினகரனை அதிமுகவில் சேர்க்கவே இல்லை’ எனக் கூறினார்.

இதற்கு இன்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், ‘சசிகலா எனக்கு சித்தி. அவர் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டுத் தற்போது தான் விடுதலைக் காற்றை சுவாசிக்கிறார். அவரது உடல்நிலை நன்றாக இருக்க வேண்டும் என்பதில் தான் எனது முழு எண்ணமும் உள்ளது.

எடப்பாடி பழனிசாமி, சின்னமாவைக் குறித்துப் பேசியதை பற்றி இப்போது பேச எனக்கு விருப்பமில்லை. இன்றைக்கு அரசியல் பேச வேண்டாம் என நினைக்கிறேன்.

ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்கிறேன். தமிழக மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அம்மாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்திட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அதற்கு ஏற்றவாறு அனைத்தும் நடக்கும்’ என்று சூசகமாக தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version