தமிழ்நாடு

‘என்ன பரமா பயமா..?’- 2 தொகுதிகளில் களமிறங்கும் டிடிவி தினகரன்!

Published

on

ஏப்ரல் 6 ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர் தேர்வில் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தங்களின் முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை, தேமுதிகவுடன் கூட்டணியை உறுதி செய்யும் மும்முரத்தில் இருக்கிறது. அதே நேரத்தில் நேற்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார். அதன்படி வரும் தேர்தலில் அவர் கோவில்பட்டி சட்டசபைத் தேர்தலில் களமிறங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த தொகுதியில் தமிழக செய்தித் துறை அமைச்சரும், அதிமுகவின் முக்கிய நிர்வாகியுமான கடம்பூர் ராஜூவும் களமிறங்குகிறார். இத்தொகுதியில் இருவருக்கும் இடையிலான போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுங்கட்சி என்பதாலும், அமைச்சர் பதவியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர் என்பதாலும் கடம்பூர் ராஜூ, மீண்டும் வெற்றி பெறவும் அதிக வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு தினகரன், இன்னொரு தொகுதியிலும் போட்டியிடுவார் என சொல்லப்படுகிறது. இது குறித்து அவர், ‘தேமுதிகவுடன் இன்று பேச்சுவார்த்தை முடிந்துவிடும் என நம்புகிறேன். இன்னொரு தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து அறிவிப்பை வெளியிடுவேன்.

நான் மக்களை நம்பியும் ஜெயலலிதாவின் உண்மைத் தொண்டர்களை நம்பியும் களத்தில் இறங்குகிறேன். வெற்றி எனக்கே’ என்றுள்ளார். அப்படி கோவில்பட்டியில் வெற்றி வாய்ப்பு அதிகம் இருந்தால், தினகரன் ஏன் இன்னொரு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

 

 

Trending

Exit mobile version