இந்தியா

இலவச தரிசன டோக்கன்களை நிறுத்த திருப்பதி தேவஸ்தானம் திட்டம்!

Published

on

கடந்த சில நாட்களாக திருப்பதிக்கு வரும் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன்கள் வழங்கி வரும் நிலையில் அந்த டோக்கன்களை நிறுத்த திருப்பதி திருமலை தேவஸ்தானம் முடிவு செய்திருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படாமல் இருந்தனர். இதனை அடுத்து கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ரூபாய் 300 தரிசன டிக்கெட் மட்டும் வழங்கப்பட்டது என்பதும் அந்த டிக்கெட் வைத்துள்ள பக்தர்கள் மட்டும் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இலவச தரிசனம் அனுமதிக்கப்பட்டது என்பதும் முதல் கட்டமாக உள்ளூர் பக்தர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தினமும் 2,000 இலவச டோக்கன்கள் வழங்கி வந்த நிலையில் வெளியூர் மற்றும் வெளி மாநில பக்தர்களின் வசதியை கணக்கில் கொண்டு தினமும் 8 ஆயிரம் இலவச டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் வழங்கி வந்தது. ஆனால் அதே நேரத்தில் இந்த டோக்கன்களை வாங்குவதற்கு இரவு முழுவதும் பக்தர்கள் காத்து இருக்கின்றனர் என்பதும் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டை காற்றில் பறக்க விட்டுவிட்டு டோக்கன்களை வாங்க பக்தர்கள் குவிந்ததால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனை அடுத்து கவுண்டரில் கொடுக்கப்பட்டு வரும் இலவச தரிசன டோக்கன்களை நிறுத்திவிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. அதற்கு பதிலாக வரும் 24-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் பக்தர்களுக்கு இலவச தரிசன டோக்கன் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி அக்டோபர் மாதத்திற்கான 300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகளை வரும் 24ம் தேதி முதல் வழங்கப்படும் ஆன்லைனில் வழங்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version