தமிழ்நாடு

சென்னையில் ரூ.100 கோடியில் ஏழுமலையான் கோவில்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

Published

on

சென்னையில் ரூபாய் 100 கோடி செலவில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது பக்தர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஏற்கனவே திருப்பதி ஏழுமலையான் கோவில் சிறிய அளவில் உள்ள நிலையில் பெரிய அளவில் தியாகராயநகரில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என பக்தர்கள் பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் ஏழுமலையான் கோவில் கட்டுவதற்கு சரியான இடம் கிடைத்தால் ரூபாய் 100 கோடியில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என திருப்பதி திருமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, திருப்பதி தேவஸ்தானத்தின் ஆலோசகர் குழுவின் கூட்டம் சென்னை தியாகராய நகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பா ரெட்டி, தமிழ்நாடு திருப்பதி தேவஸ்தான தலைவர் சேகர் ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் வேலூர் மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்த் இந்த கூட்டத்தின்போது துணைத் தலைவராக பதவி ஏற்றுக் கொண்டார் என்பதும் மேலும் 24 உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் தேவஸ்தான நிர்வாகிகள் பேசியபோது, ‘சென்னை தியாகராயநகரில் ஏழுமலையான் கோவில் கட்ட வேண்டும் என்ற பக்தர்கள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அதற்கான இடத்தை தேடி வருகிறோம் என்றும் சரியான இடம் கிடைத்தவுடன் ரூபாய் 100 கோடியில் ஏழுமலையான் கோவில் கட்டப்படும் என்றும் தெரிவித்தனர்.

மேலும் சென்னை தியாகராயநகரில் பத்மாவதி அம்மாள் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதும் வரும் அக்டோபர் மாதத்திற்குள் அந்த பணிகள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் ஜம்மு காஷ்மீரிலும் ஏழுமலையான் கோவில் கட்ட அரசு 66 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது என்றும் விரைவில் அங்கும் ஏழுமலையான் கோவில் கட்டி முடிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர.

 

seithichurul

Trending

Exit mobile version