விமர்சனம்

பரமபதம் விளையாட்டு விமர்சனம்.. பாதுகாப்பற்ற பகுதி கவனம்… சேதாரத்திற்கு நாங்கள் பொறுப்பு ஏற்க முடியாது..!

Published

on

தமிழ்நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியின் தலைவர் வேலராமமூர்த்தி. நடக்கப்போகும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க மக்களிடம் எந்த மாதிரியான பரப்புரை செய்யலாம் என கட்சியின் பொதுக்குழுவை கூட்டி ஆலோசனை நடத்துகிறார். பணம் கொடுக்க கூடாது, நாம் செய்த நல்லதை மட்டும் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு இந்த முறை இளைஞர்களுக்குத்தான் கட்சியில் போட்டியிட வாய்ப்பு என்றும் வாரிசுகளுக்கு தன்னுடைய கட்சியில் இடமில்லை என்றும் கூறிவிட்டுச் செல்கிறார். வீட்டுக்குச் சென்று லண்டனில் தன் மகன் நந்தா புதிதாக கட்டியுள்ள மருத்துவமனை திறப்பு விழாவிற்கு செல்லலாம் எனத் திட்டமிட்டுருக்கும் சூழலில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். அங்கே அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர் திர்ஷா வருகிறார்.

தன்னுடைய வாய் பேசமுடியாத காது கேட்காத மாற்றுத்திறனாளி குழந்தையுடன் வசித்து வருகிறார். ஊரே தலைவருக்கு என்ன ஆனது என்று பரபரப்பில் இருக்க கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அவர் பிழைக்க கூடாது என்றும், கட்சியின் தலைமை பொறுப்பில் தாங்கள் வந்துவிட வேண்டும் என்றும் முயற்சி செய்கிறார்கள். இதற்கிடையே தந்தையைப் பார்க்க நந்தா லண்டனில் இருந்து வருகிறார். நந்தா வந்த சில நாட்களிலியே வேலராமமூர்த்தி இறந்துவிடுகிறார். நன்றாக உடல்நிலை தேறி வந்த தலைவர் எப்படி இறந்தார் என மருத்துவர் திர்ஷா புலனாய்வு செய்கிறார். அதில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கின்றன. யார் தலைவரைக் கொன்றது? கொலையைக் கண்டுபிடிக்கச் சென்ற திர்ஷாவுக்கு என்ன ஆனது? என்பதைச் சொல்லும் படம் தான் பரமபதம் விளையாட்டின் கதை.

திர்ஷா-வின் 60வது படம்… உண்மையில் தமிழ் சினிமாவில் நாயகியாக ஒருவர் 60 படங்களுக்கு மேல் வலம் வருவது ஆச்சர்யம் தான். அதை நயன்தாரா, திர்ஷா சாத்தியம் ஆக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் வயதான முகம் தெரிந்தாலும் தனக்குக் கொடுத்த பாத்திரத்தில் தேவையான நடிப்பை கொடுத்திருக்கிறார். பார்க்க கொஞ்சம் நாடகத் தனமாகவும் இருக்கிறது. இன்னும் கூட சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கலாம். அப்போ இது சிறந்த கதை இல்லையா? என்று கேட்டால் தமிழ் சினிமாவில் இதே மாதிரி 1,999 படங்கள் வந்துவிட்டன. இது 2,000-வது படம். அவ்ளோ அதர பழசான கதை, அதை விட அதரப்பழசான திரைக்கதை. அறையில் இருந்து நாம் பார்த்துக்கொண்டிருக்கும் போது என் வீட்டில் வசனத்தை வைத்தே அடுத்து இந்தக் காட்சிதான் வரும் என்று சொல்லும் அளவிற்கு பழைய காட்சி அமைப்புகள். படம் தொடங்கியதில் இருந்து என் இணையர் அடுத்து இந்தக் காட்சி தான், அடுத்து இதுதான் வரும், இவர் தான் கொலைகாரன் எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

படமே இப்போ தானே ரிலீஸ் எப்படி உனக்கு இதெல்லாம் தெரியும் என்று கேட்டால் அலோ போங்க நாங்க பாக்காத சினிமாவான்னு அடிச்சுட்டுப் போயிட்டே இருக்காங்க.
இப்போ இருக்கும் சூழலில் நம்மை நம்பி ஒருவர் பணம் போட்டு படம் எடுக்கிறேன் என்று வருவதே சிரமமான விஷயம். அப்படி வாய்ப்புக் கிடைக்கும் போது அதை பிடித்துக்கொண்டு அடுத்தடுத்த இடங்களுக்குச் செல்ல வேண்டும் இல்லையா? திர்ஷா-வுக்கு இது 60 படங்கள்.

நாயகியை மையமிட்டு வரும் போது கொஞ்சம் கூடுதலாக சிரத்தை எடுத்து கதை கேட்டு தேர்வு செய்தால் நல்லது இல்லையா? நந்தாவுக்கும் தான். நம்மை நாமே ஏன் குறைவாக எடை போட வேண்டும். அதுமட்டுமல்ல ஹீரோ என்று படத்தின் பாதிக்கும் மேல் ஒரு கேரக்டரை அறிமுகம் செய்வார் இயக்குநர். யாப்பா சாமி நீ எப்போ வாயை மூடுவன்னு உக்காந்துட்டு இருந்தோம். காமெடி என்று அவர் பேசியது எல்லாம் எரிச்சலின் உச்சம். போதும் விட்டுடுங்க. கதையே ஒட்டவில்லை அப்புறம் எப்படி மத்த கதாபாத்திரங்கள் மனதில் ஒட்டும்…

பொழுது போக்கிற்காக சினிமா பார்க்கலாம் என்றால் யப்பா சாமி எப்படா விடுவிங்கன்னு கதறும் அளவுக்கு ஒரு படத்தை எடுத்து வைத்திருக்கிறார் இயக்குநர் திருஞானம். வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம் பாஸ். கொஞ்சம் பாத்துப்பண்ணுங்க… இந்த ரெண்டு பக்கக் கட்டுரையையும் படிச்சுட்டு நீங்க படத்தைப் பார்த்துதான் ஆவேன்னு சொன்னா சேதாரத்துக்கு செய்திச்சுருள் பொறுப்பு ஆகாது. ஹாட் ஸ்டாரில் இருக்கிறது. படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால் அது ஆபாத்தான முடிவு. அப்படியே குழி தோண்டி புதைத்து விடவும்… அக்கறையுடன் செய்திச்சுருள்…

seithichurul

Trending

Exit mobile version