இந்தியா

நாடாளுமன்றத்தில் விவாதம் செய்யும் முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது ஏன்? டி.ஆர்.பாலு ஆவேசம்!

Published

on

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசன பிரிவு 370 ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு நேற்று அறிவித்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த மசோதா இன்றுதான் மக்களவையில் விவாதத்தில் உள்ளது. ஆனால் இந்த மசோதாவுக்கு நேற்றே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தி நிறைவேற்றப்பட்ட பின்னர் நேற்று மக்களவையில் இந்த மசோதாவை தாக்கல் செய்தார் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இதனையடுத்து இன்று இந்த மசோதா தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை இருந்து வருவதாக திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

இந்த விவாதத்தின் போது பேசிய டி.ஆர்.பாலு, தற்போது அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவி வருகிறது என்று நான் நினைக்கிறேன். என்னுடைய சக மக்களவை எம்பி பரூக் அப்துல்லா எங்கிருக்கிறார்? அவர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளாரா அல்லது கைது செய்யப்பட்டுள்ளாரா என்று கூட எங்களுக்கு தெரியவில்லை. இதுபோல் காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி ஆகியோர் எங்கிருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், சட்டப் பிரிவு 370 தற்காலிக தீர்வல்ல, அது நிரந்தர தீர்வு. நாடாளுமன்றத்தில் விவாதம் செய்வதற்கு முன்பே குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றது ஏன்? ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதி இன்னும் எதிரிகளின் கைகளில் இருக்கிறது. காஷ்மீரில் சட்டமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் அங்கு தேர்தலை நடத்தியிருக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் மனநிலையை பிரதிபலிக்கக் கூடியவர்கள் காஷ்மீர் சட்டமன்றத்தில்தான் உள்ளனர். பெரும்பான்மை இருக்கும் ஒரே காரணத்தால் அனைத்து மசோதாக்களையும் நிறைவேற்றுகிறீர்கள் என கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

seithichurul

Trending

Exit mobile version