உலகம்

பைடன் நிர்வாகத்துக்கு தூது விட்ட சீனா.. இணைந்து செயல்பட அழைப்பு.. சம்மதம் சொல்லுமா அமெரிக்கா?

Published

on

பீஜிங்: சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவை மீண்டும் கணிக்க கூடிய வகையிலும், ஆக்கபூர்வமான வகையிலும் வைக்க வேண்டும் என்று சீனாவின் உயர்மட்ட அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஹாங்காங், திபெத் போன்ற சீனாவின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதையும் நிறுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்பின் ஆட்சி காலத்தில் அமெரிக்கா – சீனா இடையே உறவு அவ்வளவு சுமுகமாக இருந்திருக்கவில்லை. வர்த்தக போர் தொடங்கி பல விவகாரங்களில் இருநாடுகளும் மோதிக்கொண்டு தான் இருந்தன. குறிப்பாக சீனா தொடர்ந்து ஹாங்காங் சீன நிலப்பரப்பின் ஒரு பகுதி என மீண்டும் மீண்டும் கூறி வருகிறது. ஆனால் ஹாங்காங் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இப்படியான சூழலில் ஹாங்காங், தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கு ஆயுதம் வழங்கும் ஒப்பந்தத்தில் அமெரிக்கா கையெழுத்திட்டது.மேலும் ஹாங்காங் மீதான சீனாவின் ஆதிக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளையும் அமெரிக்கா மேற்கொண்டது.

அதேபோல, சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் இருக்கும் உய்கூர் இன முஸ்லிம்களை முகாம்களில் அடைத்து வைத்து அங்கு மனித உரிமை மீறல்கள் நடைபெறுவதாக வெளியான தகவலை அடுத்து அதற்கு எதிராகவும் அமெரிக்க கண்டனம் தெரிவித்து வந்தது. இவை தவிர தென் சீன கடல் எல்லை பிரச்சனை, கொரோனா வைரஸ் பரவல், இந்தியா-சீனா மோதலின் போது இந்தியாவுக்கு ஆதரவாக களமிறங்கியது என முழுக்க முழுக்க சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தற்போது புதிதாக அமைந்துள்ள பைடன் நிர்வாகம் சீனாவுடன் சுமுக உறவை கடைபிடிக்கும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் தான் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய வெளியுறவு ஆணையத்தின் இயக்குனரும், சீனாவின் உயர்ந்த பதவியில் இருப்பவருமான யாங் ஜீச்சி, அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக சீனா-அமெரிக்கா உறவு குறித்து பேசியுள்ளார். அமெரிக்க-சீனா உறவுகள் தொடர்பான தேசிய குழு ஏற்பாடு செய்த ஆன்லைன் கருத்தரங்கில் பேசிய யாங், ஹாங்காங், திபெத், ஜின்ஜியாங் மற்றும் சீனாவின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை தொடர்பான பிற பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடுவதை நிறுத்த வேண்டும். இவை சீனாவின் முக்கிய நலன்கள் மற்றும் தேசிய கவுரவம் தொடர்பான பிரச்சினைகள் என்று வரையறுக்கப்படுவதாகவும் யாங் கூறினார். அதிபர் தேர்தல் உட்பட அமெரிக்காவின் எந்த ஒரு உள் விவகாரங்களிலும் சீனா தலையிடாது என்றும் கூறினார்.

உலகில் அமெரிக்க நிலைப்பாட்டுக்கு சவால் விடவோ அல்லது அதை மாற்றவோ சீனாவிற்கு எந்த நோக்கமும் இல்லை என்று அமெரிக்காவிற்கு உறுதியளிக்கும் அதே வேளையில், எந்தவொரு சக்தியும் சீனாவின் வளர்ச்சியைத் தடுக்க முடியாது என்று யாங் தெரிவித்துள்ளார். ஆதிக்க சக்தி, அதிகார போட்டி போன்ற காலாவதியான மனநிலையில் இருந்து அமெரிக்கா வெளியேறும் என்றும், அமெரிக்கா – சீனா சரியான பாதையில் வைத்திருக்க சீனாவுடன் இணைந்து அமெரிக்கா செயல்படும் என்று தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார். மோதல்கள் இல்லாமல், பிரச்சனைகள் இல்லாமல் பரஸ்பர மரியாதை மற்றும் இரு தரப்பிலும் வெற்றி என்கிற பாதையில் அமெரிக்காவுடன் உறவை முன்னோக்கி நகர்த்த சீனா தயாராக உள்ளதாகவும் யாங் வலியுறுத்தியுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version