கிரிக்கெட்

இன்று ஐபிஎல் இறுதிப்போட்டி: சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது?

Published

on

கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த ஐபிஎல் திருவிழா இன்றுடன் நிறைவுக்கு வர உள்ளது. இன்று குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில் இன்றைய போட்டியில் வெல்லும் அணி தான் இந்த ஆண்டின் சாம்பியன் பட்டத்தை வெல்ல போகும் அணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டன. குஜராத் மற்றும் லக்னோ அணிகள் புதிய அணிகளாக இருந்தாலும் தொடர் வெற்றியை பெற்று வந்தன என்பதும் இரு அணிகளுமே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் இதில் குஜராத் மட்டுமே இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதேபோல ஆரம்பத்திலிருந்தே அசத்தலாக ஆடிய ராஜஸ்தான் அணியின் அனைவரும் எதிர்பார்த்தபடியே பிளே ஆப் சுற்றுக்கு வந்து தற்போது இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் ஆரம்பம் முதலே தொடர் வெற்றி பெற்று வரும் பலமான குஜராத் அணியை ராஜஸ்தான் அணி இன்று இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் லீக் போட்டிகளில் இருமுறை மோதிகொண்ட நிலையில் இரண்டு முறையும் குஜராத் அணிதான் வெற்றி பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியிலும் குஜராத் அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஆனால் ராஜஸ்தான் அணியை பொறுத்தவரை நட்சத்திர ஆட்டக்காரர் ஜாஸ் பட்லர் அபாரமாக விளையாடி வருகிறார். அவருக்கு ஆட்டம் பிடித்துவிட்டால் அவரை கட்டுப்படுத்தவே முடியாது. 4 சதம், 4 அரை சதம் என 824 ரன்களை குவித்து ஆரஞ்சு கோப்பையை கைவசம் வைத்துள்ளார். இன்றைய போட்டியிலும் பட்லர் மாயாஜாலம் நிகழ்த்தினால் அந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் சாம்பியன் பட்டம் பெற்ற ராஜஸ்தான் அணி அதன்பிறகு சாம்பியன் பட்டத்தின் பக்கம் கூட செல்ல முடியவில்லை. இந்த முறையாவது அந்த அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

குஜராத் அணியை பொறுத்தவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்பட அந்த அணியில் நட்சத்திர வீரர்கள் பலரும் குறிப்பாக சுப்மன் கில், டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா, ரஷித்கான் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். இந்த இன்றைய போட்டியிலும் அதே பார்ம் தொடர்ந்தால் கண்டிப்பாக குஜராத் அணி சாம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

seithichurul

Trending

Exit mobile version