வேலைவாய்ப்பு

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய விண்ணப்பதாரர்கள் பட்டியல் வெளியீடு!

Published

on

சென்னை: குரூப் 4 தேர்வில் சான்றிதழ் பதிவேற்றம் செய்தோர் மற்றும் செய்யாதவர்களின் விவரங்களை அறிந்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இதுகுறித்து, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்ட அறிக்கையில், தொகுதி 4-இல் அடங்கிய காலிப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நடத்தப்பட்டது. அதற்கான தேர்வு முடிவுகள் (தரவரிசைப் பட்டியல்) கடந்த ஜூலை 30-இல் வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தரவரிசை மற்றும் இனசுழற்சி அடிப்படையில் சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டிய விண்ணப்பதாரர்களின் விவரங்களும் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தேர்வு செய்யப்பட்ட 31 ஆயிரத்து 425 விண்ணப்பதாரர்கள் கடந்த செப்டம்பர் 18 வரையிலும், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இணையச் சேவை மையங்களில் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.

 

சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள மற்றும் பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர்களின் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் (http://www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும் 2-ஆம் தேதி வரை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து தோ்வா்களின் சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பதாரர்கள் சான்றிதழ்கள் தேர்வாணையத்தால் பெறப்பட்டதனால் மட்டுமே அவர்கள் இந்தத் தேர்வுக்குத் தகுதியானவர்களாகக் கருதப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்குப் பின்னர்த் தரவரிசை மற்றும் இனசுழற்சியின் அடிப்படையில் கலந்தாய்வுக்குத் தகுதியானவர்களின் பட்டியல் விரைவில் தனியே வெளியிடப்படும்.

இதுகுறித்துச் சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300336, 044-25300337 தொலைப்பேசி எண்களில் அலுவலக வேலை நாட்களில் காலை 10.30 முதல் மாலை 5.45 வரை தொடர்பு கொள்ளலாம் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version