தமிழ்நாடு
நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல: எச்சரிக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜு!
![Sarkar 4 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2018/11/Sarkar-4-2.jpg)
நடிகர் விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படம் நேற்று வெளியானது. இதில் அரசியல் உள்நோக்கத்துடன் அமைந்துள்ள காட்சிகளை நீக்க வேண்டும் என அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்துள்ளார்.
கதை திருட்டு சர்ச்சையில் சிக்கிய சர்கார் திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ள வரலட்சுமிக்கு கோமலவள்ளி என பெயரிடப்பட்டுள்ளது. இது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இயற்பெயர் என்பதால் தற்போது இது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் இந்த சர்கார் திரைப்படத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு வெளிப்படையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சர்கார் படத்தில் உள்ள சில காட்சிகள் தொடர்பாக அரசுக்கு தகவல்கள் வந்துள்ளன. அரசியல் உள்நோக்கத்துடன் சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த காட்சிகளை அவர்களாகவே நீக்க வேண்டும். இது நடிகர் விஜய்க்கு நல்லது அல்ல. சர்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக முதல்வருடன் கலந்து ஆலோசிக்கப்படும் என்றார் அமைச்சர் கடம்பூர் ராஜு.