தமிழ்நாடு

‘ஸ்டாலினுக்கு ரொம்ப நன்றிங்க..!’- அமைச்சர் கடம்பூர் ராஜூ ‘பகீர்’ பேச்சு

Published

on

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு, தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் முன்னதாக, ‘தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழகத்துக்கும் வழி பிறக்கும். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக ஆட்சி மலர்ந்திடும். கழக அரசு அமைந்ததும், ஏழை, எளிய, நடுத்தரக் குடும்பத்தினர் நலம்காக்க விவசாயக் கடன், நகைக் கடன், கல்விக் கடன் தள்ளுபடி உறுதி என்ற உவப்பான செய்தியுடன் எனது வாழ்த்தை உரித்தாக்குகிறேன். இருள் விலகி ஒளி பாயட்டும்.

தமிழர் திருநாளைத் தமிழ்நாடெங்கும் சமத்துவப் பொங்கல் விழாவாக கொண்டாடுவோம். மக்களின் இதயங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். வாழ்வின் விடியலுக்கான வெளிச்சத்தைக் கொண்டு வரட்டும் உதயசூரியனின் ஒளிக்கதிர்கள்’ என்று கூறினார்.

ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று ஸ்டாலின் குறிப்பிட்டத்தை சுட்டிக்காட்டிப் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘ஸ்டாலின் இப்போது அல்ல, 2016 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் முதல் ‘ஆட்சி மாற்றத்துக்கான காலம் வந்துவிட்டது’ என்று தொடர்ந்து சொல்லி வருகிறார். அவரும் பல ஆண்டுகளாக இதை சொல்லி வந்து தற்போது சலிப்படைந்து விட்டார். மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். மக்கள் எதிர்பார்ப்பது ஆட்சி மாற்றம் அல்ல. ஆட்சி தொடர வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்.

ஆனால் ஸ்டாலினுக்குத் தனி விருப்பம் உள்ளது. அது என்றும் நிறைவேறாது. இப்போது கூட, தமிழக அரசு, ஏழை எளிய மாணவர்கள் பயன் பெறும் வேண்டும் என்ற வகையில், தினமும் 2 ஜிபி இலவச டேட்டா கொடுக்கப்படும் என்று அறிவித்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்டாலின், அந்த திட்டத்தில் குறை கண்டு பிடித்தார். தானும் செய்ய மாட்டேன். செய்பவர்களையும் குறை கூறுவேன் என்பதில் உறுதியாக இருக்கிறார் ஸ்டாலின். ஆனால், மக்கள் அவரின் நாடகங்களைத் தெளிவாக புரிந்து கொள்கிறார்கள். ஸ்டாலின் பேச பேச, அதிமுகவின் வாக்கு வங்கி தான் அதிகரிக்கும். எனவே ஸ்டாலின் தொடர்ந்து பேச வேண்டும். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று பேசியுள்ளார்.

 

 

Trending

Exit mobile version