தமிழ்நாடு

ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. இலவச ரேஷன் பொருட்கள் உண்டு தமிழக முதல்வர் அதிரடி!

Published

on

தமிழகத்தில் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கஈ ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு நீட்டிப்பால், வருமானம் இல்லாததால், மக்கள் உணவுப் பொருட்கள் இன்றி பாதிப்பார்கள் என்பதற்காக மே மாதமும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே ரேஷன் அட்டை தாரர்களுக்கும் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்.

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு 2வது முறையாக 1000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

மேலும் காய்கறிகள் போன்று, சோப்பு, பேஸ்ட் போன்ற அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களும் தட்டுப்பாடின்றி வீடுகளுக்கே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு பற்றி தமிழக முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று நோயைக் கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டில், கடந்த 24.3.2020 அன்று மாலை 6 மணி முதல் 31.3.2020 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை 15.4.2020 அன்று காலை வரை நீட்டித்தது. ஊரடங்கு உத்தரவு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பெரிய அளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது
தொடர்பாகவும், கொரோனா வைரஸ் நோய்த் தொற்று தொடர்பாக மாநிலங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளையும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்கள் காணொலிக் காட்சி மூலமாக 11.4.2020 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார்.

இக்கலந்தாய்வின்போது, தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன். மேலும், 30.4.2020 வரை ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தினை தெரிவித்தேன். நானும், மற்ற முதலமைச்சர்களும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கையான ஊரடங்கு உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தின்
நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின் படியும், மருத்துவ நிபுணர் குழு மற்றும் பொது சுகாதார வல்லுநர் குழுக்களின் பரிந்துரைகளின் படியும், மாநிலத்தில் ஊரடங்கை தளர்த்தினால், நோய்த் தொற்று அதிகரிக்கக் கூடும் என்பதை கருத்தில் கொண்டும், 11.4.2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படியும், பேரிடர் மேலாண்மை சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், 30.4.2020 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது.

கொரோனா நோய்த் தொற்றினை தடுக்கும் நோக்கில், பேரிடர்
மேலாண்மைச் சட்டம் 2005ன் படியும், குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவு 144ன் படியும், தற்போது நடைமுறைபடுத்தப்பட்டு வரும் அனைத்து கட்டுப்பாடுகளும் தொடரும்.

ஞீ ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால், தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும், அதாவது ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய், அரிசி குடும்ப
அட்டைதாரர்களுக்கு எப்பொழுதும் வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும்.

கட்டடத் தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா
தொழிலாளர் குடும்பங்களுக்கும், குடும்பம் ஒன்றுக்கு இரண்டாவது முறையாக 1,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கப்படும்.

பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு, மே மாதத்திற்காக 15 கிலோ அரிசி, ஒரு கிலோ துவரம் பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் விலையின்றி வழங்கப்படும்.

பல்வேறு தரப்பினரிடமிருந்து வந்த கோரிக்கைகளை பரிசீலித்து, தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையிலான காலத்தில், அடுமனைகள் (பேக்கரி) இயங்க தடையில்லை என்பதையும், ஏற்கனவே, உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளின்படி அடுமனைகளிலும் பார்சல் விற்பனை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என தெளிவுபடுத்தப்படுகிறது.

மேலும், சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள், கொரோனா
நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள டெலி
மெடிசின் சொஸைட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் பதிவு பெற்ற சிறந்த
மருத்துவர்களைக் கொண்டு, தொலை மருத்துவ முறை மூலம் தங்கள்
மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழ்நாடு அரசு வழிவகை செய்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும், ஒவ்வொரு குடும்பமும்
பாதுகாப்பாக இருப்பது தான் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு மிகவும்
முக்கியமானது. ஆகவே, தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்ற அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி, “விழித்திருங்கள், விலகி இருங்கள், வீட்டில் இருங்கள்” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், சமூக இடைவெளியை கடைபிடித்து, கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.” என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version