தமிழ்நாடு

‘செய்து கொள்ளுங்கள்’ என சொன்ன அண்ணாமலை.. கே.டி.ராகவன் வீடியோவை ரிலீஸ் செய்த மதன் ரவிசந்திரன்!

Published

on

தமிழக பாஜக பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் ஆபாச சாட் செய்வது போன்ற வீடியோ இன்று காலை முதல் சமூக வலைத்தளங்களில் உலவி வருகிறது.

அது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “இன்று காலை முதல் சமூக ஊடகங்களில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி.ராகவன் அவர்கள் சம்மந்தப்பட்ட வீடியோ குறித்து செய்திகளை அறிந்தேன்.

இந்த வீடியோவை வெளியிட்ட யூ டியூபர் மதன் ரவிச்சந்திரன் அவர்கள் என்னைச் சந்தித்துப் பேசியது உண்மை.

முதல் முறையாக என்னைக் கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியது கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்குத் தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தேன்.

ஆகவே அந்த வீடியோ பதிவுகளை எங்களிடம் காட்சிப்படுத்தினால் அதன் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினேன். ஆனால் அவர் அந்த பதிவுகளை என்னிடம் ஒப்படைக்க மறுத்துவிட்டார்.

அடுத்த நாள் மறுபடி என்னை அலுவலகத்தில் சந்தித்த மதன் ரவிச்சந்திரன் அவர்கள் வலுவான வீடியோ பதிவுகள் உள்ளன. அவர்கள் மீது நீங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டு என்று வலியுறுத்திக் கூறினார்.

ஒரு சர்ச்சைக்குரிய வீடியோ பதிவை நம்பி மட்டும் அதன் உண்மைத்தன்மையை அறியாமல் சம்பந்தப்பட்டவர்களுடன் அதன் மேல் விசாரணை செய்யாமல் குற்றம் சாட்டும் நபரின் வாய் வார்த்தை மட்டும் நம்பி எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?

ஆகவே மதன் ரவிச்சந்திரன் இரண்டாம் முறை வலியுறுத்திய போதும் ஆதாரமாக அவர் சுட்டும் பதிவுகளைச் சமர்ப்பிக்கக் கூறினேன்.

அதன்பின் மூன்றாவது முறையாக அலைபேசியில் குறுஞ்செய்தி அனுப்பி, நான் ஏற்கனவே கேட்டுக் கொண்டபடி எனக்கு உடனடியாக நியாயம் கிடைக்குமா? நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று கேட்டு இருந்தார். கட்சி ரீதியான நடவடிக்கை என்ற முடிவையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றா.. தான் வீடியோ பதிவுகளை வெளியிடப் போவதாகக் குறுஞ்செய்தியில் கூறியிருந்தார். முன்னர் இரண்டு முறை நேரில் சந்தித்தபோது நான் கூறியபடி குற்றச்சாட்டு என்ன என்பதை அறியாமல், நடவடிக்கை எடுக்க முடியாது என்ற என் முடிவில் நான் உறுதியாக இருந்தேன். ஆகவே என் பதிலில் ‘செய்து கொள்ளுங்கள்’ என்று சுருக்கமாக முடித்து விட்டேன்.

இன்று காலை கே.டி.ராகவன் அவர்களிடம் பேசினேன். 30 ஆண்டுக் காலத்திற்கு மேலாக உண்மையாகவும் நேர்மையாகவும் கட்சி பணியாற்றிய தன் மீது களங்கம் கற்பிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன், கட்சியின் நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் எண்ணத்துடன், உயிர் தொழில்நுட்பத்தில் தனக்கு எதிராக ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு என்றும், இதைத் தான் சட்டரீதியாக எதிர்கொள்ள இருப்பதாகவும் கே.டி.ராகவன் தெரிவித்தார். மேலும் கட்சியின் மாண்பையும், செம்மையையும் கருதி, தான் கட்சியின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்வதாகத் தெரிவித்தார்.

நானும் அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டேன். கே.டி.ராகவன் அவர்கள் இந்த பிரச்சனையை முறைப்படி சட்டரீதியாக எதிர்கொண்டு நிரூபிப்பார் என்று நம்பிக்கை எனக்கு இருக்கிறது.” என அண்ணாமலை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version