தமிழ்நாடு

புதுவையில் மேலும் 3 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ராஜினாமாவா? பாஜக தலைவர் தகவல்

Published

on

புதுவையில் கடந்த 2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ் 14 தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக ஆதரவுடன் ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திடீரென காங்கிரஸ் எம்எல்ஏக்கள் நான்கு பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கு மெஜாரிட்டி இல்லை என்ற குரல் எழுந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் புதுவை மாநில துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஏற்ற தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் முதல்வர் நாராயணசாமி வரும் 22ஆம் தேதிக்குள் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் இந்த உத்தரவுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த முதல்வர் நாராயணசாமி ’ஆளுநர் தமிழிசை வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார் என்று கூறினார்.

இந்த நிலையில் புதுவையில் மேலும் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்வார்கள் என புதுவை மாநில பாஜக தலைவர் சாமிநாதன் என்பவர் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது ’மேலும் மூன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், யாரையும் கட்டாயப்படுத்தியோ அல்லது மிரட்டியோ பாஜகவில் சேர்க்கவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலம் இல்லை என்பதால் அந்த கட்சியை விட்டு அவர்களாகவே விலகி வருவதாகவும் கூறியுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர்கள் மொத்தம் தற்போது 10 பேர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் மேலும் 3 எம்எல்ஏக்கள் விலகினால் முதல் அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசு கவிழ்வது உறுதி என்று அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

seithichurul

Trending

Exit mobile version