கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் வீரர்களின் உயிருக்கு ஆபத்து: பிசிசிஐ பரபரப்பு கடிதம்!

Published

on

இந்திய கிரிக்கெட் அணியினர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இதில் இந்திய அணி அதிக புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள இந்திய அணியின் வீரர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக பிசிசிஐ, ஐசிசிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியுடன் மோதியது. இந்த போட்டியின் போது மைதானத்துக்கு மேலே விமானத்தில், காஷ்மீருக்கு நீதி வேண்டும் என்ற வாசகம் அடங்கிய பேனர் பறக்கவிடப்பட்டது. இதனால் மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் மீண்டும் வலம் வந்த அதே விமானம், இனப்படுகொலையை இந்தியா நிறுத்துக, காஷ்மீரை சுதந்திரமாக்கு என்ற வாசகம் அடங்கிய பேனரை பறக்கவிட்டது.

அத்தோடு நின்றுவிடாமல் மூன்றாவது முறையாக போட்டி நடந்துகொண்டிருக்கும் போது வலம் வந்த அந்த விமானம், இனப்படுகொலைக்கு உதவுவதை தவிர்க்கவும் என்ற வாசகத்தை பறக்கவிட்டது. இதனால் மைதானத்தில் உச்சக்கட்ட பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இது குறித்து சர்வதேச கிரிக்கெட் சங்கத்துக்கு, இந்திய கிரிக்கெட் சங்கம் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

அதில், இதுபோன்ற சம்பவங்களால் இந்திய வீரர்களின் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும். இனிவரும் போட்டிகளுக்கு இந்திய வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து இனிவர உள்ள போட்டிகளில் மைதானங்களுக்கு மேலே விமானங்கள் பறக்க தடை விதிக்கப்படும் என தகவல்கள் வருகின்றன.

Trending

Exit mobile version