சினிமா செய்திகள்

இந்த காதலையும் ஜாதி வெறி தடுக்கிறது – மெஹந்தி சர்கஸ் விமர்சனம்!

Published

on

குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகனின் அண்ணன் சரவண ராஜேந்திரன் மெஹந்தி சர்கஸ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ராஜு முருகன் கதை எழுதியுள்ளார். மென்மையான காதல் கதை மற்றும் சர்கஸ் கலைஞர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகியுள்ள காதல் கதையில் ஜாதி வெறி எப்படி பிரச்னை உண்டு பண்ணுகிறது என்பதே மெஹந்தி சர்கஸ் படத்தின் கதைக் களம்.

அறிமுக நாயகன் மாதம்பட்டி ரங்கராஜ் இப்படியொரு எளிமையான பெயரில் சினிமா ஹீரோவை பார்ப்பதே அரிது. அதுவும் அறிமுக படத்தில் பல தோற்றங்களில் அசால்ட்டாக நடிப்பை அள்ளித் தெளித்து விட்டு செல்கிறார் ரங்கராஜ்.

நாயகியாகவும் உயிரை பணயம் வைத்து சர்கஸ் செய்யும் சாகசகாரியாகவும் நாயகி சுவேதா திரிபாதி இளைஞர்களின் மனங்களை கொள்ளை கொள்கிறார். ஷான் ரோல்டனின் பின்னணி இசை மற்றும் இளையராஜா பாடல்களை அவர் கையாண்டுள்ள விதம் படத்திற்கு கூடுதல் பலத்தை தருவது மட்டும் அல்லாது, நம்மையும் காதல் கொள்ள செய்கிறது.

கொடைக்கானலில் கேசட் கடை வைத்து நடத்தும் ரங்கராஜின் தந்தை மாரிமுத்து ஜாதி வெறி பிடித்தவர். ஆனால், நாயகனோ அதற்கு மாறாக இளையராஜா பாடல்களை விற்பனை செய்து காதலர்கள் மத்தியில் பிரபலமானவராக திகழ்கிறார். கேசட் கடை வைத்து நடத்துபவர் என்றவுடனே படம் பீரியட் படம் என்பது தெளிவாக தெரிந்துவிடும்.

அதற்கு ஏற்றவாறு எஸ்.கே. செல்வகுமார் அழகான ஒளிப்பதிவை அமைத்து அழகுபடுத்தியுள்ளார்.

ராஜஸ்தானில் இருந்து கொடைக்கானலுக்கு வரும் மெஹந்தி சர்கஸ் குழுவில், உயிரை பணயம் வைத்து கத்தி வீசும் சாகசத்தில் பங்கேற்கும் பெண்ணாக நாயகி சுவேதா கலக்குகிறார்.

இவர்கள் காதல் முதலில் நாயகியின் தந்தைக்கு தெரியவர, நாயகனுக்கு அவர் ஒரு போட்டி வைக்கிறார். அதில் நாயகன் வெற்றி பெற்றாரா? இந்த காதல் ஜாதி வெறி பிடித்த மாரிமுத்துவுக்கு தெரியவர அவர் எப்படி இதற்கு எதிரியாகிறார்? இறுதியில் இந்த காதல் ஜெயித்ததா? இல்லையா? என்பதே மெஹந்தி சர்கஸின் கதையாகும்.

மென்மையான காதலை சொல்லும் ரம்மியமான காதல் படங்கள் தமிழ் சினிமாவில் அவ்வப்போது அரிதாக தோன்றும், அதுபோன்ற குறிஞ்சி மலர் தான் மெஹந்தி சர்கஸ்.

சினி ரேட்டிங்: 3.75/5.

author avatar
seithichurul

Trending

Exit mobile version