தமிழ்நாடு

ஆளுநரிடம் ஊழல் புகார்: ‘இது வெறும் பார்ட்-1 தான்… விரைவில் பார்ட்-2 ரிலீஸ்’- தமிழக அரசுக்கு ஸ்டாலின் செக்

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தமிழக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தி, 97 பக்கங்கள் கொண்ட ஆதாரங்களை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். ஆளுநருடனான சந்திப்பின் போது ஸ்டாலினுடன், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, பொருளாளர் டி.ஆர்.பாலு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.

ஆளுநருடனான சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறியதாவது:-

‘தமிழகத்தில் கடந்த 4 வருடத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் புரையோடு போயிருக்கிறது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் பல்வேறு புகார்களை திமுக கொடுத்துள்ளது. ஆனால், லஞ்ச ஒழிப்புத் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குறிப்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உலக வங்கி நிதி ஊழல், நெடுஞ்சாலைத் துறையில் ஊழல், அரிசியை வெளிச் சந்தையில் விற்ற மாபெரும் ஊழல், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது குறித்து நாங்கள் முறையாக புகார்கள் அளித்துள்ளோம்.

அதேபோல, துணை முதல்வராக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்து முறையிடப்பட்டுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் அமைச்சரவையில் உள்ள எஸ்.பி.வேலுமணி, உதயகுமார், ஜெயக்குமார், விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்கள் மீதும் தொடர்ந்து ஊழல் புகார்கள் அளித்துள்ளோம். ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் ஆளுநரிடம் நாங்கள் அது குறித்தான ஆதாரங்களையும் ஆவணங்களையும் கொடுத்துள்ளோம். 97 பக்க ஆதாரங்களை ஆளுநரிடம் சமர்பித்துள்ளோம். இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அரசியல் சட்ட சாசனம் அதிகாரம் வழங்கியுள்ளது. எனவே விரைவில் இந்த ஊழல் புகார்கள் குறித்து நடவடிக்கை எடுக்க ஆளுநர் உத்தரவிட வேண்டும். இவ்வாளு ஸ்டாலின் கூறினார்.

seithichurul

Trending

Exit mobile version