இந்தியா

’உங்கள் பணிநேரம் முடிந்துவிட்டது, வீட்டுக்கு செல்லலாம்.. ஊழியர்களுக்கு தகவல் கொடுக்கும் கணினி..!

Published

on

பொதுவாக தனியார் நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு 10 முதல் 6:00 மணி வரை வேலை நேரமாக இருந்தாலும், வேலை முடியும் நேரம் என்பது முன்பின் இருக்கத்தான் செய்யும். கடைசி நேரத்தில் அவசரப்பணி வந்தால் அதை தவிர்க்க முடியாமல் கூடுதலாக சில நிமிடங்கள் வேலை பார்த்துவிட்டு செல்வதே பல தனியார் நிறுவனங்களில் வழக்கமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் மிகச் சரியாக ஒரு ஊழியரின் ஷிப்ட் நேரம் முடியும்போது உங்கள் பணி நேரம் முடிந்துவிட்டது நீங்கள் வீட்டுக்கு செல்லலாம் என்ற மெசேஜ் அவர்களது கம்ப்யூட்டரில் வருவதோடு, கம்ப்யூட்டர் தானாகவே ஆப் ஆகி விடுவதாகவும் கூறப்படுகிறது.

மத்திய பிரதேஷ் மாநிலம் இந்தூரில் உள்ள SoftGrid Computers என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாளர்களின் ஷிப்ட் முடிந்தவுடன் தானாகவே கணினி ஷட்-டவுன் ஆகிவிடும் என்றும் கூறப்படுகிறது. கம்ப்யூட்டரில் தெரியும் எச்சரிக்கை செய்தியை புகைப்படத்தை அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஒருவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உங்கள் ஷிப்ட் நேரம் முடிய இன்னும் பத்து நிமிடம் தான் இருக்கிறது, உங்கள் சிஸ்டம் ஷட் டவுன் ஆகிவிடும், வீட்டுக்கு செல்லுங்கள் என உள்ளது. இந்த பதிவுக்கு ஏராளமான நெட்டிசன்கள் தங்களது கமெண்ட்ஸ்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதுபோன்ற ஒரு நிறுவனத்தில் தான் வேலை செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் என்றும் சரியாக வீட்டுக்கு போய் பல நாட்கள் ஆகிவிட்டது என்றும் ஒருவர் பதிவு செய்துள்ளார். பலர் இந்த நிறுவனத்தின் இந்த புதிய முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தாலும் சிலர் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இது ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்க வேண்டும் என்று ஊழியர்களை கட்டாயப்படுத்தும் ஒரு தந்திரம் என்றும் தெரிவித்துள்ளனர். நம்முடைய மனம் ரிலாக்ஸாக இருக்கும் போது தான் வேலை செய்ய முடியுமே தவிர குறிப்பிட்ட நிமிடங்களுக்குள் வேலை செய்ய வேண்டும் என்ற அழுத்தத்திற்கு உள்ளாக கூடாது என்று பலர் தெரிவித்து வருகின்றனர். மொத்தத்தில் இது ஒரு புதிய முயற்சியாக தான் ஊழியர்கள் மத்தியில் பார்க்கப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version