உலகம்

945 நாட்களுக்கு பின் மாஸ்க் அணியும் கட்டுப்பாட்டை விலக்கி கொண்ட நகரம்..!

Published

on

கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் அதாவது 945 நாட்கள் கழித்து மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற அறிவிப்பை ஹாங்காங் நகரம் விலக்கிக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் சீனா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து கிட்டத்தட்ட அனைத்து நாடுகளில் உள்ள மக்களும் மாஸ் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே. இந்தியா உள்பட பல நாடுகளில் மாஸ்க் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்பட்டது என்பதும் அதேபோல் ஹாங்காங் நகரில் ஆயிரம் டாலர் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி மாஸ்க் அணிவது கட்டாயம் என ஹாங்காங் நகர நிர்வாகம் உத்தரவிட்ட நிலையில் அந்த உத்தரவு நேற்றுதான் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது. 945 நாட்கள் கழித்து மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்ற உத்தரவை ஹாங்காங் நகர நிர்வாகம் பிறப்பித்துள்ளதை அடுத்து நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இது குறித்து ஹாங்காங் நகரின் தலைவர் ஜான் லீ என்பவர் கூறுகையில் ’ஹாங்காங் நகரில் கொரோனா வைரஸ் நிலைமை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் எனவே இனி மாஸ்க் அணிவது கட்டாயம் இல்லை என்ற அறிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். ஹாங்காங் நகரம் மிகப்பெரிய அளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்ததால் நீண்ட காலமாக மாஸ்க் அணிவது கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றும் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து முழுமையாக மீண்டுவிட்ட நிலையில் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்த பின்னர் தான் இந்த உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இருப்பினும் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் நர்ஸ்கள் ஆகியோர்கள் தங்கள் பணியிடங்களில் மாஸ்க் அணிந்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஹாங்காங் நகரம் முழுமையாக இயல்பு நிலையை பெற்றுள்ளதை அடுத்து பொருளாதார வளர்ச்சி, சர்வதேச போட்டி தன்மை மற்றும் சுற்றுலாத்துறை ஆகியவற்றை பலப்படுத்த திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஹாங்காங் நகரில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது என்பதும் குறிப்பாக வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் 21 நாட்கள் வரை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது உள்பட பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது சுற்றுலா துறையை மேம்படுத்துவதற்காக கொரோனா வைரஸ் சம்பந்தப்பட்ட அனைத்து நிபந்தனைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

Trending

Exit mobile version