தமிழ்நாடு

சிறைவாசிகளை விடுதலை செய்ய சொன்ன உச்ச நீதிமன்றம்: மு.க.ஸ்டாலினுக்கு திருமா முக்கிய கோரிக்கை!

Published

on

கொரோனா தொற்றுப் பரவலைக் கணக்கில் கொண்டு தகுதியுள்ள சிறைவாசிகளை விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ள நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கோரிக்கை வைத்துள்ளார்.

‘கொரோனா பாதிப்பின் காரணமாக சிறைவாசிகளின் எண்ணிக்கையைக் குறைக்குமாறும், தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் மாநில அரசுகளுக்கு 07.05.2021 அன்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தகுதிவாய்ந்த சிறைவாசிகளைப் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டுமென தமிழக அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

கொரோனா பாதிப்பிலிருந்து சிறைவாசிகளைக் காப்பது தொடர்பாக கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் தானே முன்வந்து வழக்கொன்றைப் பதிவுசெய்தது. அந்த வழக்கில் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் எந்தெந்த கைதிகளை விடுவிப்பது என்பதை முடிவுசெய்ய தமிழ்நாட்டில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. அந்த உயர்நிலைக்குழுவின் பரிந்துரையின்படி, 2020 ஏப்ரல் மாதத்தில் 4,182 சிறைவாசிகள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களில் 90 சதவீதம் பேர் பிணை முடிந்து மீண்டும் சிறைக்குச் சென்றுவிட்டனர். இந்நிலையில் 07.05.2021 அன்று மீண்டும் அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 5 உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

1. அர்னேஷ் குமார் எதிர் பீகார் மாநிலம் என்ற வழக்கில் அளித்த தீர்ப்பில் முன்வைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணாக எவரொருவரும் கைது செய்யப்படக்கூடாது.

2. கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட உயர்நிலைக் குழுக்கள் அதே வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் சிறைவாசிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்; உயர்நிலைக் குழு அமைக்காத மாநிலங்கள் உடனடியாக அந்த குழுக்களை அமைக்க வேண்டும்.

3. உயர்நிலைக் குழுவில் புதிதாக சிறைவாசிகளை பிணையில் விடுவிப்பது பற்றி பரிசீலிக்கும் அதேவேளையில் 23. 3 .2020 அன்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி விடுவிக்கப்பட்ட அனைத்து சிறைவாசிகளையும் மீண்டும் பிணையில் விடுவிக்க வேண்டும்.

4. உச்ச நீதிமன்றத்தால் கடந்த ஆண்டு பரோல் வழங்கப்பட்ட சிறைவாசிகளுக்கு மீண்டும் 90 நாட்களுக்கு பரோல் வழங்கவேண்டும்.

5. உயர்நிலைக் குழுவின் முடிவுகளும் சிறைவாசிகளின் எண்ணிக்கை குறித்த விவரங்களும் அந்தந்த மாநில சிறைத் துறையின் இணையதளத்தில் உடனடியாகப் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்
என்று உச்சநீதிமன்றம் தனது ஆணையில் குறிப்பிட்டுள்ளது.

எனவே தமிழக அரசின் சிறைத்துறை காலதாமதம் செய்யாமல் உச்சநீதிமன்ற ஆணையின்படி சிறைவாசிகளை பிணையில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்’ இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

 

Trending

Exit mobile version