இந்தியா

பாதுகாப்பு பெட்டகம் வரை சுரங்கம்.. எஸ்பிஐ வங்கியையே காலி செய்த கொள்ளையர்கள்!

Published

on

பாதுகாப்பு பெட்டகம் வரை சுரங்கம் தோண்டி எஸ்பிஐ வங்கியில் உள்ள தங்கம், ரொக்கம் என மொத்தத்தையும் காலி செய்த கொள்ளையர்களால் கான்பூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கான்பூர் அருகே உள்ள எஸ்பிஐ வங்கியில் திருடர்கள் பத்தடி நீளத்துக்கு சுரங்கப்பாதை தோண்டி உள்ளே சென்று சுமார் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கான்பூரில் உள்ள பானுதி என்ற பகுதியின் ஸ்டேட் வங்கி கிளை கடந்த சில ஆண்டுகளாக இயங்கிவருகிறது. இந்த வங்கியை கடந்த பல நாட்களாக நோட்டமிட்ட கொள்ளையர்கள் வங்கியின் பாதுகாப்பு பெட்டகம் எங்கே இருக்கிறது என்பதை கண்டுபிடித்து உள்ளனர்.

அதன் பின்னர் அந்த பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து சில அடி தூரத்தில் இருந்த காலி மனையில் இருந்து சுரங்கம் தோண்ட ஆரம்பித்தனர். இரவோடு இரவாக 10 அடி சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள் பாதுகாப்பு பெட்டகத்தில் நுழைந்து அங்கு உள்ள லாக்கரை உடைத்து 1.8 கிலோ தங்கம் மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் ரொக்கத்தின் மதிப்பு 1 கோடிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. மறுநாள் காலை வங்கி அதிகாரிகள் வங்கியை திறந்தபோது பாதுகாப்பு பெட்டகத்தில் கொள்ளையடிக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்தனர். அதுமட்டுமின்றி அங்கிருந்து தோண்டப்பட்ட சுரங்கத்தையும் கண்டுபிடித்தனர்.

இதனை அடுத்து காவல்துறையில் புகார் அளித்த நிலையில் காவல் துறையினர் விரைந்து வந்து மோப்ப நாய் மற்றும் தடயவியல் ஆய்வாளர்கள் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொள்ளை பல நாட்கள் திட்டமிடப்பட்டு கைதேர்ந்த கொள்ளையர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது என்றும் ஒரு சில கைரேகைகள் சிக்கியுள்ள நிலையில் அந்த கைரேகைகளை வைத்து கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுரங்கம் தோண்டி ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கம் மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version