தமிழ்நாடு

தமிழகத்தின் இந்த 7 மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகம் – உண்மையை உடைத்த அரசு!

Published

on

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக நாட்டில் உள்ள 19 மாநிலங்களில் கொரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழகமும் ஒரு மாநிலமாக இருக்கிறது. இந்த ‘கொரோனாவின் இரண்டாவது அலையை’ திறம்பட சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து நேற்றுப் பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதல்வர்களுடன் கலந்துரையாடினார். 

அப்போது பிரதமர் மோடி, ‘நாட்டில் இப்போது பரவி வரும் கொரோனா தொற்றைத் தடுக்கவில்லை என்றால் நாட்டில் மீண்டும் வைரஸ் பரவல் அதிகரிக்கக் கூடும். தற்போது உருவாகி வரும் கொரோனாவின் இரண்டாவது அலையை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை நாம் எடுத்தாக வேண்டும். 

கொரோனாவை எதிர்த்து நாம் போராடியதன் மூலம் பெற்ற தன்னம்பிக்கை, அதீத நம்பிக்கையாக மாறிவிடக் கூடாது. நம் வெற்றி என்பது தவறான பாதையில் வழிநடத்தும்படி செய்துவிடக் கூடாது. கொரோனாவுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் மக்கள் பீதியடையாமலும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்றார். 

இந்நிலையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியுள்ள தமிழக சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், ‘தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகமாக இருப்பது உண்மை தான். இந்தப் பரவலுக்குக் காரணம் மக்கள் அதிகமாக கூடும் திருமண நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் ஆகியவையே. இந்தக் கூட்டங்களை நடத்துவதால் எவ்விதப் பிரச்சனைகளும் இல்லை. அதே நேரத்தில் முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி மக்கள் நடந்து கொள்ள வேண்டும். முக்கியமாக மக்கள் மாஸ்க் அணிய வேண்டும். 

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, கோயம்புத்தூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருப்பூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது’ என்றார். 

Trending

Exit mobile version