சினிமா

திருமணமான காதலரை மீண்டும் அடைய நினைக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. தீராக் காதல் விமர்சனம்!

Published

on

திருமணம் ஆகி மனைவி குழந்தை உடன் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து வரும் கெளதம் (ஜெய்) 8 ஆண்டுகளுக்கு முன்னதாக கல்லூரியில் காதலித்து பிரிந்த ஆரண்யாவை (ஐஸ்வர்யா ராஜேஷ்) வேலை நிமித்தமாக வெளியூருக்குச் செல்லும் போது சந்திக்க நேரிடுகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் இந்த இடைப்பட்ட காலத்தில் அஜ்மத்துடன் திருமணம் ஆகி விடுகிறது. வழக்கம் போல அவர் கொடுமைக்கார புருஷனாக இருக்க வேறு வழியில்லாமல் பழைய காதலன் ஜெய்யை அடைய ஐஸ்வர்யா ராஜேஷ் முயல்வதும் மனைவியா? காதலியா? என்பதில் ஜெய் கிளைமேக்ஸில் எதை தேர்வு செய்தார் என்பது தான் இந்த தீராக் காதல் படத்தின் கதை.

#image_title

பல படங்களில் பார்த்திருந்தாலும், இதுபோன்ற சென்சிடிவான காதல் கதைகள் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஏகப்பட்ட ரசிகர்களுக்கே அனுபவமாக உள்ள நிலையில், எப்போது எடுத்தாலும் இந்த மாதிரியான கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நிச்சயம் ஒரு வரவேற்பு இருக்கும் என்பதை புரிந்துக் கொண்டே இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இந்த படத்தை இயக்கி உள்ளார்.

வெளியூருக்கு வேலை நிமித்தமாக செல்லும் ஜெய்யும் ஐஸ்வர்யா ராஜேஷும் சந்தித்த உடனே அவர்களது கல்லூரி வாழ்க்கை ஃபிளாஷ்பேக்காக விரிகிறது. பின்பு மீண்டும் சந்தித்த தருணத்தை வீணடித்து விடக் கூடாது என இருவரும் கிடைத்த அந்த நாட்களை நெருக்கமாக பழகி தங்கள் பழைய காதலை புதுப்பித்துக் கொள்கின்றனர்.

#image_title

ஆனால், தனக்கு ஒரு குடும்பம் இருக்கிறது என்பது ஜெய்க்கு நினைவு வரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷை விட்டுப் பிரிந்து சென்று விடுகிறார். ஐஸ்வர்யா ராஜேஷுக்கும் அஜ்மத்துக்கும் சண்டை ஏற்பட ஐஸ்வர்யா ராஜேஷ் ஜெய்யின் வீட்டின் எதிரே குடி வந்து எப்படியாவது தனது பழைய காதலை அடைந்தே தீர வேண்டும் என வல்லவன் ரீமா சென்னாக கொஞ்ச நேரம் மாறுகிறார்.

ஆனால், கடைசியில் தீராக் காதல்ன்னு டைட்டில் வச்சிருக்காங்களே கிளைமேக்ஸ் எப்படி முடியும் என்கிற விறுவிறுப்பைக் கொடுத்து சுபமாக முடித்திருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது.

ஜெய்யின் மனைவியாக நடித்துள்ள ஷிவதா இந்த படத்தில் அன்பான மனைவியாகவும் கணவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என பதைபதைக்கும் இடத்தில் சாதாரண பெண்ணாகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்கிறார். ஜெய்யின் குழந்தையாக நடித்த சிறுமி, நண்பராக வருபவர் என அனைவருமே படத்தில் சிறப்பாக நடித்துள்ளனர்.

சில குறைகள் இருந்தாலும், படமாக பார்க்கும் போது, அவை மறந்து விடும். நிச்சயம் தியேட்டரில் ஒரு முறை இந்த படத்தை பார்க்கலாம்.

தீராக் காதல் – போர் படமல்ல!

ரேட்டிங்: 3.25/5

seithichurul

Trending

Exit mobile version