சினிமா செய்திகள்

இரண்டாவது கோல் அடித்தாரா ஹிப் ஹாப் ஆதி; நட்பே துணை விமர்சனம்!

Published

on

யூடியூபர் மற்றும் பாடகராக அறிமுகமான ஹிப் ஹாப் ஆதி, இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவாக உயர்ந்துள்ளார். அவரது நடிப்பில் இன்று வெளியாகி இருக்கும் நட்பே துணை படம் எப்படி இருக்கு என்பதை பார்ப்போமா?

கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மற்ற விளையாட்டுக்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற ஒன்லைனை கையில் எடுத்துக் கொண்டு, மெட்ராஸ் படத்தில் வரும் சுவர் பிரச்னை மற்றும் புகழ் படத்தில் வரும் கிரவுண்ட் பிரச்னை போன்ற கதைகளை மனதில் கொண்டு விளையாட்டு மற்றும் அரசியல் கலந்த படமாக நட்பே துணை வெளியாகியுள்ளது.

சமீபத்தில் வரக்கூடிய படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவை மாற்றுகிறேன் என்ற பேர்வழியில் வெறும் இருட்டாகவே காட்சிகளை அமைத்து, தியேட்டருக்குள் போனால், பயத்திற்கு பதிலாக தூக்கமே வருகின்றன.

ஆனால், சுந்தர்.சியின் தயாரிப்பு படமான நட்பே துணை படம், கலர்ஃபுல், இளமை கொண்டாட்டமாக அமைந்துள்ளது.

லாஜிக் மீறல்கள் இருந்தாலும், மீசையை முறுக்கு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கும் இந்த படத்திற்கும் ரசிகர்கள் கைத்தட்டல் கிடைத்துள்ளது. நிச்சயமாக இரண்டாவது கோலை அடித்துள்ளார் ஆதி.

பார்த்திபன் தேசிங்கு எனும் அறிமுக இயக்குநர், முதல் படம் என்று கூற முடியாத அளவுக்கு ஹாக்கி மற்றும் அரசியல் கலந்த படமாகவும், எக்கச்சக்க யூடியூபர்களை களமிறக்கி, அதகளம் பண்ணியுள்ளார்.

பாண்டிச்சேரியில் பிறந்தால் பிரான்ஸுக்கு போகலாம் என்ற கனவோடு இருக்கும் ஹீரோ, ஹாக்கி விளையாடும் அனகா மீது காதல் கொள்கிறார்.

அவர்கள் விளையாடும் ஹாக்கி கிரவுண்டை கார்ப்ரேட் கம்பெனி ஒன்று, உலகமே தடை செய்த மருந்து விற்பனைக்காக தேர்வு செய்கிறது. அந்த கம்பெனிக்கு அந்த இடத்தை காலி செய்து தர லோக்கல் அரசியல்வாதியான கரு. பழனியப்பன் செய்யும் முயற்சியை ஹிப் ஹாப் ஆதி தடுத்தாரா? தேசிய அளவில் ஹாக்கி விளையாடும் வாய்ப்பை பெற்ற அவரது அணி அந்த போட்டியில் வென்றதா? என்பதை கலகலப்புடன் கலர்ஃபுல் மற்றும் கருத்துடன் தந்துள்ள படம் தான் நட்பே துணை.

மீசையை முறுக்கு படத்தில் ஆதியின் தந்தையாக விவேக் நடித்திருந்தார். இந்த படத்தில், நடிகர் பாண்டியராஜன் தந்தையாக கலக்கி உள்ளார்.

யூடியூபர்களான ஆர்.ஜே. விக்னேஷ் காந்த், எருமைசாணி விஜய், சுட்டி அரவிந்த், புட் சட்னி ராஜமோகன், சாரா, பழைய ஜோக் தங்கதுரை இன்னும் பலர் அவர்களுக்கான ரோல்களை அசால்ட்டாக நடித்து விட்டு, சிரிப்பு அலைகளை கிளப்புகின்றனர்.

நட்புக்கான செண்டிமெண்ட் படத்தில் பெரிதாக கைகொடுக்காதது படத்திற்கான மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது.

மீசையை முறுக்கு அளவுக்கு இந்த படம் இல்லை என்றால், படத்தின் கதைக்களம், மீசையை முறுக்கு படத்தை முந்திச் செல்கிறது.

நாளை உறியடி 2, பிஎம் நரேந்திரமோடி உள்ளிட்ட படங்கள் வெளியாகும் நிலையில், இன்றே படத்தை ரிலீஸ் செய்ததில் ஹிப் ஹாப் ஆதி கெட்டிக்காரர் என்பதை நிரூபித்துள்ளார்.

தேர்தல் நேரம் என்பதால், தொடர்ந்து அரசியல் படங்கள் வரிசைக் கட்டி வருகின்றன. இவை மக்களுக்கு சளிப்பை தட்டி விடாமல் இருக்க வேண்டும்.

seithichurul

Trending

Exit mobile version