விமர்சனம்

ஆண் முகத்தில் சாட்டையை வீசியிருக்கிறது… The Great Indian Kitchen விமர்சனம்…

Published

on

திருமணம் ஆகிச் செல்லும் ஒரு பெண் தன் கணவன் வீட்டில் என்ன செய்துகொண்டிருக்கிறாள். அல்லது என்ன செய்ய வைக்கப்படுகிறாள். அவளது எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதையும் அந்த கட்டமைக்கப்பட்ட எதிர்காலத்தில் இருந்து மீள அவள் எடுத்த முடிவு என்ன என்பதை அழுத்தமாகச் சொல்லியிருக்கும் படம் தான்  The Great Indian Kitchen என்ற மலையாளப் படம்.

எப்போது ஒரு சின்ன ஒன்லைனை வைத்துக்கொண்டு அட்டகாசமாக படமாக்கும் பல இயக்குநர்கள் மலையாளத்தில் உண்டு என்பதற்கு மற்றுமொரு உதாரணம் தான் ஜோ பேபியின் இந்த The Great Indian Kitchen.

நல்ல திறமையான டான்ஸ் ஆடும் பெண் திருமணம் ஆகிச் செல்கிறாள். அன்றைய நாளில் இருந்து தினமும் காலையில் எழுந்து வீட்டில் இருப்பவர்களுக்கு உணவு சமைத்துக் கொடுப்பது… வீட்டு வேலைகளை செய்வது… இது இரண்டை தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை என்ற நிலையில் வாழ்கிறார். அதுதான் பெண்ணின் கடமை, குடும்பத்திற்காக வாழ்வதுதான் பெண்ணிற்கு படைக்கப்பட்ட உன்னதமான வாழ்க்கை என்று ஆண்கள் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

 

நாயகி மட்டுமல்ல, அவள் பேசும், சந்திக்கும் அனைத்து பெண்களும் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வதைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள். தன் செருப்பை கூட தான் எடுத்து போட்டுக்கொள்ளாத ஆண்கள் தான் இங்கே இருக்கிறார்கள் என்பதை சொல்கிறது.

நாகரீகம், அறிவியல், பண்பாடு என பலதரப்பட்ட வகையில் இந்திய சமூகம் வளர்ந்துவிட்டாலும் பெண்கள் இன்னும் என்னவாக வீட்டில் நடத்தப்படுகிறார்கள். அவர்களது ஆசை, அவர்களுக்கான பாலியல் விருப்பம், அவர்கள் உணர்வுகள் என அனைத்திற்கும் ஆண் சமூகத்தில் என்ன மரியாதை கிடைக்கிறது என்பதை முகத்தில் அறைந்தார் போல சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஜோ பேபி.

பெண் சுதந்திரம், பெண்கள் முன்னேற்றம், பெண்ணிய சிந்தனை எனப் பேசும் பல முற்போக்குவாதிகளும் பெண்களை ஒரு சடப் பொருளாகத்தான் நினைக்கிறார்கள் என்பதை மீண்டும் அழுத்தமாக சொல்லியிருக்கிறது The Great Indian Kitchen.

நாயகியாக நிமிஷா சசயன் சோறு ஆக்குவது, வீட்டை சுத்தம் செய்வது, வீட்டுக் கழிவுகளை அகற்றுவது, கணவனுக்கு தோணும் போது அவன் விருப்பப்படி செக்ஸ் வைத்துக்கொள்வது என வாழும் பெண். அவற்றை சகித்துக்கொண்டு ஒரு சராசரி இந்திய பெண்ணின் உணர்வுகளை இயல்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனாக சூரஜ் வெஞ்சரமூடு… ஒட்டுமொத்த ஆண்களின் உருவமாக நிற்கிறார். அவரது பாத்திரம் மீது வெறுப்பு உருவாகும் அளவுக்கு அவரது நடிப்பு இருக்கிறது.

தொடர்ந்து வரலாற்றில் பெண்களுக்கான இடம் பற்றி பேசிக்கொண்டே வருகிறார்கள். ஆனாலும் அவர்களுக்கான இடம் என்ன என்பதில் இன்னும் பலருக்கும் ஒரே கருத்துதான் உள்ளது. இந்த லட்சனத்தில் கமல்ஹாசன் வீட்டு வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் என்று வேறு சொல்கிறார். இதெல்லாமுமா வளர்ச்சி.

உண்மையில் பெண்களை புரிந்துகொண்ட சமூகம் இன்னும் உருவாகவில்லை. இனியும் உருவாகப் போவதில்லை. பெண்களுக்கான வழிகளை அவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர அது ஆணதிகார மையத்திடம் இருந்து ஒரு சின்ன அளவும் கிடைக்கப் போவதில்லை. ஆண்கள், ஆணகளால் கட்டமைக்கப்பட்ட இந்த சமூகம் எப்போதும் பெண்களை போகப் பொருளாக, வீட்டு வேலை செய்யும் ஒரு கருவியாக மட்டுமே பார்க்கும் என்பதை ஆண்களின், சமூகத்தின் முகத்தில் அறைந்தார் போல சொல்லியிருக்கும் மற்றொரு படைப்புதான் The Great Indian Kitchen.

கட்டாயம் அனைத்து ஆண்களும் பார்க்க வேண்டிய படம் இந்த The Great Indian Kitchen. நிச்சயம் ஒரு நல்ல சினிமா பார்த்த உணர்வைக் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…

 

seithichurul

Trending

Exit mobile version