தமிழ்நாடு

தேர்தல் ரத்து குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

Published

on

தேர்தலை ரத்து செய்வது குறித்து எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி குறிப்பிட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பணபட்டுவாடா புகார் காரணமாக குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த நேரத்திலும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்கள் சற்றுமுன் அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர், உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் சேப்பாக்கம் உள்ளிட்ட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென அதிமுக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு அவர்கள் ’பணப்பட்டுவாடா நடந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்வது தொடர்பாக எந்த நேரத்திலும் தலைமை தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கலாம் என்று கூறினார்.

மேலும் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை இடைவெளி இன்றி 12 மணி நேரம் தொடர்ச்சியாக வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள், உடல் வெப்பநிலை அதிகமாக உள்ளவர்கள் மாலையில் ஓட்டு போட வசதி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வாக்குச்சாவடிகளில் எத்தனை பேர் வரிசையில் இருக்கின்றனர் என்பதை தேர்தல் ஆணையத்தின் இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் பூத் ஸ்லிப் இல்லை என்றாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தால் அடையாள அட்டை உள்ளிட்ட உரிய ஆவணத்துடன் வந்து வாக்கு அளிக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அவர்களின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Trending

Exit mobile version