தமிழ்நாடு

காரை வைத்து மாடுபிடி வீரர்கள் என்ன செய்வார்கள்? பிரபல இயக்குனர் கேள்வி!

Published

on

ஜல்லிக்கட்டில் வீர சாகசம் செய்த காளையர்களுக்கும், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கும் முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கார் பரிசு அளித்தது குறித்து பிரபல இயக்குனர் ஒருவர் விமர்சனம் செய்துள்ளார்.

சமீபத்தில் நடந்த பாலமேடு, அலங்காநல்லூர் மற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் கார் பரிசளித்தார். அதேபோல் சிறந்த மாடுகளின் உரிமையாளர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் கார் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த பரிசு குறித்து பிரபல இயக்குனர் தங்கர்பச்சான் அவர்கள் விமர்சனம் செய்து அரசுக்கு கோரிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சென்ற ஆண்டும் போட்டியில் வெற்றி பெற்ற ஜல்லிக்கட்டு வீரருக்கு கார் பரிசளித்த போது இதே கோரிக்கையை அரசிடம் அளித்திருந்தேன். ஆனால் அதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு வீரருக்கு முதல் பரிசாக முதலமைச்சர் கார் வழங்குவதாக செய்தியை அறிகிறேன்.

வீரர்கள் உயிரைப்பணயம் வைத்து பங்கு பெரும் இப்போட்டிகளை நடத்துவதில் ஒவ்வொரு தமிழரும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்! இப்போட்டியில் வென்றவர்களை ஊக்குவிக்கும் விதமாக வழங்கப்படும் பரிசுகள் குறித்து இப்பொழுதாவது அரசு சிந்திக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே இதேபோல் காரினைப் பரிசாகப் பெற்ற வீரர்கள் எந்த அளவுக்கு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள்? எந்த மாதிரியான வாழ்க்கையை இப்போது அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

காரின் தொகைக்கு ஈடாக அந்த வீரனுக்கு உழவுத் தொழில் தொடர்பான கருவிகள், மாடுகள், நிலம் இவைகளைத் தந்து அவருடைய வாழ்வுக்கு முன்னேற்றம் ஏற்படுத்தித் தந்தால் இன்னும் கூடுதலான மகிழ்ச்சியை நாம் அடையலாம்! பரிசு தரும் காரை வைத்துக்கொண்டு (எரிபொருள்) பெட்ரோல் டீசல் விற்கும் விலையில் அதற்கு செலவழிப்பதற்காகவே அவர்களுடைய வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தயவு கூர்ந்து முதலமைச்சர் இக்கோரிக்கைக் குறித்து சிந்தித்து செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு தங்கர் பச்சான் கூறியுள்ளார்.

Trending

Exit mobile version