தமிழ்நாடு

சசிகலாவை சந்தித்து முறையிட உள்ள தங்க தமிழ்செல்வன்!

Published

on

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கும் தங்க தமிழ்செல்வனுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் தங்கம் அமமுகவில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவர் சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன் என கூறியுள்ளார்.

தங்க தமிழ்செல்வன் தினகரனை மோசமாக திட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதையடுத்து இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் தங்க தமிழ்செல்வன்.

அப்போது, தலைமையிடம் உள்ள தவறுகளை வெளிப்படையாக கூறியிருந்தேன். அதற்காக என் மீது நடவடிக்கை எடுத்திருக்கலாம். ஆனால் அதைவிட்டு வாட்ஸ் ஆப் குழுக்களில் என் மீது அவதூறை பரப்புகின்றனர். இது நல்ல தலைமைக்கு அழகல்ல. எம்எல்ஏ பதவியை இழந்து இரண்டு வருடங்களாக கடுமையாக உழைத்த எங்களுக்கே இந்த நிலை என்றால் அடிமட்டத் தொண்டனுக்கு என்ன நிலை ஏற்படும் என்றார்.

இதனையடுத்து சசிகலாவின் ஓப்புதலுடன்தான் அனைத்து முடிவுகளையும் தினகரன் எடுக்கிறாரா என கேள்வி கேட்டனர் நிரூபர்கள். அதற்கு, தெரியவில்லை. அவராகச் சென்று பார்க்கிறார். அவராகவே பேட்டிகொடுக்கிறார். நாங்கள் சசிகலாவை இடையில் சந்திக்க வாய்ப்பில்லை. சந்திக்கவும் முடியாது. இந்த ஒன்றரை வருடத்தில் அவரை ஒரே ஒருமுறைதான் சந்தித்துள்ளேன்.

தற்போது வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். அமமுகவை தொடங்கியதில் சசிகலாவுக்கு உடன்பாடு இருக்கிறதா எனத் தெரியவில்லை. அவருடைய நோக்கம் அதிமுக, இரட்டை இலையை மீட்க வேண்டும் என்பதாகத்தான் இருந்தது என கூறினார் தங்க தமிழ்செல்வன்.

seithichurul

Trending

Exit mobile version