தமிழ்நாடு

தம்பிதுரையின் கருத்து அதிமுகவின் கருத்தல்ல: தமிழிசைக்கு ஆதரவாக ஜெயக்குமார்!

Published

on

மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக எம்பியுமான தம்பிதுரை சமீப காலமாக பாஜகவுக்கு எதிராக பேசி வருகிறார். இந்நிலையில் அவருடைய கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்களே. அது கட்சியின் கருத்தல்ல என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாகி உள்ளன. தமிழகத்தில் அதிமுக, பாஜக இடையே கூட்டணி குறித்து மறைமுகமாக பேசப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அதிமுக, பாஜக கூட்டணி அமையாது என எதிர்மறையான கருத்துக்களையே தொடர்ந்து கூறி வருகிறார் தம்பிதுரை.

இதனையடுத்து தம்பிதுரையின் கருத்து அவரது சொந்த கருத்து, அது அதிமுகவின் கருத்தல்ல என பாஜக தமிழக தலைவர் தமிழிசை கூறி ஆச்சரியப்படுத்தினார். இதனையடுத்து இதற்கு எதிர்வினையாற்றிய தம்பிதுரை அதிமுகவுக்குள் பாஜக மூக்கை நுழைக்க வேண்டாம் என்றார் அதிரடியாக.

ஆனால் தம்பிதுரைக்கு ஆதரவாக இருக்க வேண்டிய அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், தமிழிசைக்கு ஆதரவு அளிக்கும் விதமாக தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்துதான் கட்சியின் கருத்தல்ல என்றார். இது தொடர்பாக நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார் ஜெயக்குமார்.

அப்போது, அதிமுக என்பது கட்டுக்கோப்பான இயக்கம். தம்பிதுரை ஒரு மூத்த தலைவர். எதுவாக இருந்தாலும் வரையறைக்கு உட்பட்டதுதான். அடிமட்டத் தொண்டனாக இருந்து நானோ மற்ற அமைச்சர்களோ எதுவேண்டுமானாலும் பேசிவிட முடியாது. கட்சியின் வழிகாட்டலோடு, கட்சியின் வரையறைக்குட்பட்டுதான் கருத்துக்கள் இருக்க வேண்டும். தம்பிதுரையின் கருத்து என்பது அவருடைய கருத்தாக இருக்கலாம். ஆனால், அதிகாரப்பூர்வமாக வருவதைத்தான் தான் கட்சியின் கருத்தாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார். இது தம்பிதுரைக்கு அதிமுகவில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதையே காட்டுகிறது.

seithichurul

Trending

Exit mobile version