இந்தியா

மோடியை சீண்டிய தம்பிதுரை: மக்களவையில் அனல் பறந்த பேச்சு!

Published

on

அதிமுக எம்பியும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை பாஜகவும், பிரதமர் மோடிக்கும் எதிராக தொடர்ந்து மக்களவையில் பேசி வருகிறார். இது அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி தம்பிதுரையின் பேச்சுக்கு பாராட்டை தெரிவித்துள்ளது.

முன்னதாக ரஃபேல் விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக அழுத்தமான வாதங்களை முன்வைத்த தம்பிதுரை தற்போது பாஜக கொண்டுவந்துள்ள பொதுப் பிரிவினருக்கு 10 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கும் மசோதா மீது கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளார். இதில் பிரதமர் மோடியை நேரடியாக தாக்கி பேசியுள்ளார் தம்பிதுரை.

பொருளாதார ரீதியில் இட ஒதுக்கீடு கூடாது என பேசிய தம்பிதுரை சமூகநீதியின் அடிப்படையிலேயே இட ஒதுக்கீடு இருக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து பேசிய அவர், ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்துவதாகப் பிரதமர் மோடி உறுதியளித்தார். இதைச் செய்திருந்தால் இந்த மசோதாவைத் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமே இருந்திருக்காதே? என்றார் அதிரடியாக.

மேலும், ஒருவன் இன்று ஏழையாக இருப்பான், பொருள் சேர்ந்ததும் அவன் பணக்காரனாக மாறிவிடுவான். பிறகெப்படி இதை நீங்கள் செயல்படுத்துவீர்கள். தான் ஏழை என்று லஞ்சம் கொடுத்து சான்றிதழ் பெறுவர். இதன்மூலம் ஊழல்தான் அதிகரிக்கும் என்றும் அழுத்தமான வாதத்தை எடுத்துவைத்தார் தம்பிதுரை. அவரது இந்த வாதம் இந்தியா முழுவதும் கவனத்தை பெற்றுள்ளது. சமூக வலைதளங்களிலும் தம்பிதுரை பாராட்டை பெற்றுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version