இந்தியா

பாஜகவுக்கு எதிராக மக்களவையில் முழங்கிய தம்பிதுரை: பாராட்டிய ராகுல் காந்தி!

Published

on

ரஃபேல் ஒப்பந்தம் குறித்தான விவாதம் மக்களவையில் காரசாரமாக நடந்து வருகிறது. இதில் இதுவரை காங்கிரஸ் கட்சி பாஜகவை கடுமையாக எதிர்த்து வந்தது. ஆனால் தற்போது அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை பாஜகவையும், பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் நோக்கி கடுமையான வாதங்களை முன்வைத்துள்ளார்.

முன்னதாக ராகுல்காந்தி பாஜக, பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராம் ஆகியோரை ரஃபேல் விவகாரத்தில் கடுமையாக விமர்சித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்கு நேற்று பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆவேசமாக பதில் அளித்தார். ஆனால் அவருக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசியுள்ளார் அதிமுகவை சேர்ந்த மக்களவை துணை சபாநாயகரும், எம்பியுமான தம்பிதுரை.

அவர் பேசும்போது, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை காங்கிரஸ் அரசு ஏன் ஹெச்ஏஎல் நிறுவனத்திற்கு வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமன் கேள்வி எழுப்பினார். நான் இரண்டு கேள்விகளை முன்வைக்க நான் விரும்புகிறேன். இந்த சம்பவம் நடந்தது 2003-ஆம் ஆண்டு. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு ஆட்சியில் இருந்தபோதுதான் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது.

அந்த ஒப்பந்தம் காங்கிரஸ் ஆட்சியின்போது முறையாக நிர்வகிக்கப்படவில்லை. அதாவது அதில் எந்த முதலீடும் செய்யவில்லை, அதனை மேம்படுத்தவும் இல்லை. அதன்பிறகுதான் ஏராளமான முதலீடுகள் செய்யப்பட்டு அந்த நிறுவனம் மேம்படுத்தப்பட்டது. மேட் இன் இந்தியா, மேக் இன் இந்தியா உள்ளிட்ட திட்டங்களை முன்வைக்கும் நீங்கள் ஏன் ரஃபேல் ஒப்பந்தத்தை ஹெச்ஏஎல் நிறுவனத்திற்குத் தருவதற்கு பதிலாக, புதிய நிறுவனமான, நிதி நெருக்கடியில் இருக்கும் ரிலையன்ஸுக்கு வழங்கினீர்கள் என்றார் அதிரடியாக.

தம்பிதுரையின் இந்த அதிரடியான வாதத்தை காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. தம்பிதுரை பாஜகவுக்கு எதிராக கேள்வி எழுப்பியதும், ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மேசையைத் தட்டி வரவேற்புத் தெரிவித்தனர். தம்பிதுரையை ராகுல் எக்ஸலெண்ட் என்றும் பாராட்டினார்.

Trending

Exit mobile version