சினிமா செய்திகள்

விலகுகிறது ஏஜிஎஸ்: மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினிகாந்த்?

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ’தலைவர் 169’ திரைப்படமான ரஜினியின் அடுத்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தேசிங்கு பெரியசாமி இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன. தற்போது வந்த தகவலின்படி இந்த படத்தின் அதிகப்படியான பட்ஜெட் காரணமாக ஏஜிஎஸ் இந்த படத்தில் இருந்து விலகி உள்ளதாக கூறப்படுகிறது.

அதற்கு பதிலாக லைகா அல்லது சன் பிக்சர்ஸ் நிறுவனம் ’தலைவர் 169’ படத்தை தயாரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது. குறிப்பாக லைகாவை விட சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு ரஜினி படத்தை தயாரிக்க இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. எனவே ரஜினிகாந்த் நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதை அடுத்து அதன் பின்னர் நவம்பர் அல்லது டிசம்பர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே சன் பிக்சர்ஸ் நிறுவனம் விஜய் நடிக்கும் பீஸ்ட், சூர்யா நடிக்கும் எதற்கும் துணிந்தவன், தனுஷ் நடிக்கும் படம், விஜய் சேதுபதி நடிக்கும் படம் என பல திரைப்படங்களை தயாரித்து வரும் நிலையில் மீண்டும் ரஜினி படத்தை தயாரிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Trending

Exit mobile version