தமிழ்நாடு

எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடியார்; அதிமுக அலுவலகத்தில் போலீஸ் குவிந்ததால் பரபரப்பு!

Published

on

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக, 66 இடங்களில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தமிழகத்தின் இரண்டாவது பெரும்பான்மை பெற்ற கட்சியாக அது உருவெடுத்தது. இதனால் எதிர்க்கட்சியாக தமிழக சட்டசபையில் அமரும் வாய்ப்பை அதிமுக பெற்றது.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னரே அதிமுக தரப்பில், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையில் யார் முதல்வர் வேட்பாளர் என்கிற மோதல் வெடித்தது. அப்போது கொங்கு மண்டல வலிமையைக் காட்டி எடப்பாடியார், முதல்வர் வேட்பாளர் ஆனார்.

இதன் காரணமாக எதிர்பார்த்தபடியே, கொங்கு மண்டல மாவட்டங்களில் அதிமுக கணிசமான இடங்களில் வெற்றி வாகை சூடியது. தெற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களில் மண்ணைக் கவ்வியது.

இதனை குற்றச்சாட்டாக வைத்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பெற முயற்சி செய்தார். இதற்கு எடப்பாடி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. எடப்பாடி பழனிசாமி, எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்க ஓ.பி.எஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் இது குறித்து சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூடினார்கள். அப்போது ஒரு ஸ்திரமான முடிவு எட்டப்படவில்லை.

இன்று காலை அதிமுக எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் தலைமையகத்தில் கூடி எதிர்க்கட்சித் தலைவரை தேர்வு செய்வது குறித்து ஆலோசித்தனர். முன்னர் நடந்த கூட்டத்தில் தன்னை முன்னிலைப்படுத்திய ஓ.பி.எஸ், இன்றைய கூட்டத்தில் சபாநாயகராக இருந்த தனபாலை முன்னிலைப்படுத்திப் பேசினார்.

இதனால் எடப்பாடி தரப்புக்குப் பின்னடைவு ஏற்பட்டது. இருப்பினும் பல்வேறு ஆலோசனைகளுக்குப் பின்னர் அதிமுக, எடப்பாடி பழனிசாமியைத் தான் எதிர்க்கட்சித் தலைவராக தேர்வு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதே நேரத்தில் இந்த முடிவு எட்டப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் அதிமுக தலைமையகத்துக்கு வெளியே தமிழக காவல் துறை குவிக்கப்பட்டது. இது குறித்தான வீடியோ வெளியாகி தமிழக அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இன்று முதல் தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட முழு ஊரடங்கு அமல் செய்யப்பட்டு உள்ள நிலையில், அதிமுகவின் ஆலோசனைக் கூட்டமும், அதையொட்டி நடந்த சம்பவங்களும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளன.

 

 

seithichurul

Trending

Exit mobile version