தமிழ்நாடு

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து: கமலுக்கு தமிழிசை கண்டனம்!

Published

on

சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என காந்தியை கொன்ற கோட்சேவை குறிப்பிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நேற்று அரவக்குறிச்சியில் தனது கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்த கமல், இது முஸ்லிம்கள் நிறைய பேர் இருக்கும் பகுதி என்பதால் இதை நான் சொல்லவில்லை. காந்தி சிலைக்கு முன்பாக இதைச் சொல்கிறேன். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து. அவர் பெயர் நாதுராம் கோட்சே. நான் காந்தியின் மானசீக கொள்ளுப் பேரன். இந்த கொலைக்கு கேள்வி கேட்க நான் இன்று வந்திருக்கிறேன் என வைத்துக் கொள்ளுங்கள் என்று கமல் கூறினார்.

கமலின் இந்த பேச்சுக்கு பாஜக தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், காந்தியின் கொலையை தற்போது நினைவுகூர்ந்து அதனை இந்து தீவிரவாதம் என நடிகர் கமல்ஹாசன் கூறுவது கண்டிக்கத்தக்கது. சமீபத்தில் நடந்த இலங்கை குண்டுவெடிப்பு தொடர்பாக கமல்ஹாசன் எந்தக் கருத்தும் சொல்லவில்லை. அவருடைய திரைப்படம் மதக் குழுக்களால் தடைபட்ட போது இந்தியாவை விட்டு வெளியேறுவதாக அவர் எச்சரித்தார். ஆனால் இப்போது தன்னை உண்மையான இந்தியன் என்கிறார்.

புதிய அரசியலை முன்னெடுப்பதாகக் கூறும் கமல் பழையதை கையில் எடுத்து மத விஷம் பரப்புவது வாக்குக்காகத்தானே. இது கமலின் அரசியல் வேஷம். தன் வாழ்க்கையில் எப்போதும் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்த காந்தியின் கொள்ளுப் பேரன் என்று சொல்லிக்கொள்ள கமலுக்கு எந்த தகுதியும் இல்லை. ஏனெனில் இதுவரை கமல் வாழ்ந்த வாழ்க்கையில் எந்த ஒழுக்கத்தையும் கடை பிடிக்காதவர் என்பது நாடறிந்த உண்மை. ஊருக்கு உபதேசிக்க என்ன தகுதி? அரசியல் நடிப்பு மத உணர்வுகளைத் தூண்டி கலவரத்தை ஏற்படுத்த நினைக்கும் கமல் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version